துரை வைகோ பரபரப்பு பேச்சு; மக்கள் விரும்பினால் நிச்சயம் பதவிக்கு வருவேன்: முன்னணியில் ஒரு படைவீரனாக இருப்பேன்

சென்னை: மதிமுக வடசென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துரை வைகோ, எம்பி கணேசமூர்த்தி, எம்எல்ஏக்கள் ரகுராமன், பூமிநாதன், மாவட்ட செயலாளர் ஜீவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை துரை வைகோ வழங்கினார். தொடர்ந்து, வைகோவின் பிறந்த நாளையொட்டி 77 கிலோவில் மதிமுக கொடி வடிவில் வைக்கப்பட்டிருந்த சிறப்பு கேக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துரை வைகோ இணைந்து வெட்டினர்.

பின்னர், துரை வைகோ பேசியதாவது: 56 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் பல போராட்டங்களை போராடியவரின் பிறந்தநாள் இனி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ம் தேதி தமிழர் தலை நிமிர்வு நாளாக தமிழகம் முழுவதும் தொண்டர்களால் கொண்டாடப்படும். இந்த கட்சியில் மன்னராக, தளபதியாக இல்லாமல் முன்னணியில் ஒரு படை வீரனாக இருப்பேன். அரசியலில் நான் பக்குவப்பட வேண்டும். துரை வைகோ அரசியலிற்கு வர வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

அதை நான் அப்போதே அறிவித்து விட்டேன். துரை வையாபுரி முடிந்து விட்டது. துரை வைகோ தொடங்கி விட்டது என்று சொல்லி விட்டேன். நிறைய பேர் என்னை பதவிக்கு வர வேண்டும் என்று கூறுகின்றனர். நான் அதற்கு தயாராக வேண்டும். தொண்டர்கள் கூறுவது போன்று மக்களும் நான் பதவிக்கு வர வேண்டும் என்று கூறும்போது பதவிக்கு வருவேன். கடவுளுக்கும், மதத்திற்கும் நாங்கள் எதிரி இல்லை. மூட நம்பிக்கைக்கு தான் எதிரி. பெரியாரும் உண்டு, பெருமாளும் உண்டு என்று தான் சொல்கிறேன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி கொடுத்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>