பருவமழைக்கு முன் ஏரி தூர்வாரும் பணிகளை முடிக்க அறிவுரை; அணைகளின் கரை பலமாக உள்ளதா என ஆய்வு நடத்தி அறிக்கை தர உத்தரவு: பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா பேட்டி

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே ஏரிகளில் தூர்வாரும் பணிகளை முடிக்கவும், அணைகளில் கரைகள் பலமாக இருக்கிறதா, மதகுகள் இயங்குகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுகுறித்து, பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா நிருபர்களிடம் கூறியதாவது: அடுத்த மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது.

இந்த மழைகாலத்தில் நீர்வளத்துறை மூலம் அனைத்து முன்னேற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் 14,138 ஏரிகள், 90 அணைகள், நீர்த்தேக்கங்களில் செயற்பொறியாளர்கள் மூலம் கரைகளை பலமாக இருக்கிறதா, அங்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட வேண்டுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அணைகளின் மதகுகள் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மதகுகள் முறையாக இயங்குகிறதா என்பதை ஆய்வு செய்து அக்டோபர் 10ம் ேததிக்குள் அறிக்கையாக பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பணி துரிதமாக நடந்து வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் கடந்த 18ம் தேதி அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பருவமழை முன்னேற்பாட்டிற்கான குறுகிய, நடுத்தர, நீண்ட கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் மண்டல தலைமை பொறியாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்து நீர்நிலைகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து ஏரிகளிலும், அணைகளிலும் 24 மணி நேரம் 7 நாட்கள் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். எங்கேயாவது பிரச்னை ஏற்பட்டால் அங்கு உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்ைக எடுக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை வடிகால்வாய்களில் பிரச்னை இருந்தாலும் அனைத்து துறைகளும் சேர்ந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்.  வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏரி, குளங்களில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீர் வழித்தடங்களில் தடை ஏற்படுத்தும் வகையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால், அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு  இதுதொடர்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: