சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிக்கை அனைத்து பிராந்திய மொழிகளிலும் அக். 21க்குள் வெளியிடப்படும்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு உறுதி

சென்னை: சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிக்கையை கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி ஒன்றிய அரசு வெளியிட்டது. ஏப்ரல் மாதம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரைவு அறிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டது. அதுதொடர்பான கருத்துகள் மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், அனைத்து மாநில மொழிகளிலும் வரைவு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று மீனவர் நல சங்க அமைப்பின் தலைவர் தியாகராஜன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதேபோல, வரைவு அறிக்கையை தமிழில் வெளியிட வேண்டும். அதன் மீது கருத்துகளை தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து மொழிகளிலும் வரைவு அறிக்கை அக்டோபர் 21ம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும்,

அதுதொடர்பாக அறிக்கையை தாக்கல் கால அவகாசம் வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருத்துகேட்பு விரிவாக நடத்துவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: