9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பிரசாரம்

சென்னை: தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளன. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இதற்காக 9 மாவட்டங்களுக்கும் சென்று அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். தற்போது சேலத்தில் தங்கி இருக்கும் எடப்பாடி, இன்று (வியாழன்) காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை கட்சி நிர்வாகிகளுக்கு வழங்குகிறார். வீடு, வீடாக சென்று கடந்த அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துகூறி அவர் வாக்கு சேகரிக்கிறார்.

அதன் பிறகு நாளை (வெள்ளி) 24ம் தேதி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு செல்கிறார். அங்கு தென்காசி மாவட்ட  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அங்கு சில பகுதிகளில் வாக்கு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நெல்லை சென்று அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டம் முடிந்ததும், சென்னை திரும்பும் எடப்பாடி பழனிசாமி வருகிற சனிக்கிழமை மாலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்பிறகு திங்கட்கிழமை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Related Stories: