சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு, மதியம் சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. மீண்டும் நேற்று முன்தினம் இரவு சென்னை முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் பலத்த காற்று வீசியதால் சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

மேலும், முக்கிய சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அதிகாலை முதல் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. இதையடுத்து பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மரங்களை அப்புறப்படுத்தவும், சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி கொடுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட 15 மண்டலங்களில் மாநகராட்சி ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

அதன்படி மாணிக்கம் நகர், கணபதி சிவா நகர், வியாசர்பாடி, எம்.சி. ரோடு, ஸ்டான்லி நகர், ஆர்.பி.ஐ, கெங்கு ரெட்டி, கணேஷ்புரம், வில்லிவாக்கம், ஹாரிங்டன், நுங்கம்பாக்கம், துரைசாமி, ஜோன்ஸ் ரோடு ஆகிய சுரங்கப் பாதைகளில் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்றினர். மேலும், ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் முறிந்து விழுந்த மரத்தை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அடுத்த சில மணி நேரங்களில் போக்குவரத்து சீரானது.

Related Stories: