காந்திய வேட்டி நூற்றாண்டையொட்டி 100 தியாகிகள், நெசவாளர்களின் குடும்பங்கள் கெளரவிப்பு: ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் பேச்சு

திருப்பூர்: ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் காந்திய வேட்டி நூற்றாண்டு விழா திருப்பூர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவில் ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் வரவேற்று பேசியதாவது: வேட்டிக்கு அடையாளமாக திகழ்ந்த மகாத்மா காந்தியின் வார்த்தைகளை வேதமாக கொண்டு 40 ஆண்டுகளாக நெசவாளர்களை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுத்து வேட்டியை இந்தியாவின் அடையாளமாக்கிய பெருமையையும், வெற்றியையும் மகாத்மா காந்தியின் பாதங்களில் அர்ப்பணிக்கிறோம். இந்த விழாவில் 100 தியாகிகளின் குடும்பத்தையும், 100 நெசவாளர்களின் குடும்பத்தையும் கவுரவிக்க உள்ளோம். அதில் நேற்று முதற்கட்டமாக 3 தியாகிகள் குடும்பம், 3 நெசவாளர்கள் குடும்பம் கவுரவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தியாகி திருப்பூர் குமரனின் பேரன் சதானந்தன், தியாகி ராமசாமி மகன் பி.ஆர். நடராஜன், தியாகி சோமசுந்தரம் பேரன் சதீஸ்குமார் அகியோருக்கு ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் நாகராஜன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். அதன் பின்னர், ஆனைமலை காந்தி ஆசிரம வளர்ச்சிக்காக நாகராஜன் ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கினார். பின்னர் நெசவாளர்கள் கவுரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் ராம்ராஜ் நிறுவனத்திற்கு சுமார் 40 ஆண்டுகளாக நெசவு செய்து கொடுத்த அவிநாசி முதலியாருக்கு ரூ.1 லட்சம் நன்கொடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

அதேபோல், பழனியப்பனுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. அதே போல், சிவகாமி அம்மாளுக்கு ரூ.1 லட்சம் நன்கொடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நட்டு அதனை பராமரிக்க ரூ.1.50 லட்சத்தை நாகராஜன், ஸ்கை குழும இயக்குனரும், வனம் இந்தியா நிர்வாகியுமான சுந்தர்ராஜிடம் வழங்கினார். ஸ்கை குழும இயக்குனர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் ராம்ராஜ் நிறுவனத்தின் வெளியீடான மகாத்மாவை போற்றுவோம் என்ற புத்தகத்தை கோவையை சேர்ந்த பிரபல ரூட்ஸ் நிறுவன தலைவர் ராமசாமி வெளியிட்டார். அதனை பாரதிய வித்யா பவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வானவராயர் பெற்றுக்கொண்டார்.

Related Stories: