மாமியாருக்கு சரமாரி அடி, உதை மருமகளுக்கு பிடிவாரண்ட்: மகளிர் நீதிமன்றம் அதிரடி

செங்கல்பட்டு: மாமியாரை சரமாரியாக தாக்கிய மருமகள், நீதிமன்றத்தில் ஆஜராகமல் இருந்ததால், அவருக்கு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் ஸ்ரீதர். இவருக்கும் கல்பனா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. பின்னர், அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தனித்தனியே பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

கடந்த 2019 ஆகஸ்ட் 24ம் தேதி, தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு சென்ற கல்பனா, நாங்கள் பிரிந்து வாழ்வதற்கு நீங்கள்தான் காரணம் என கூறி, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், ஆத்திரம் குறையாத கல்பனா, தனலட்சுமியை சரமாரியாக தாக்கினார். இதில், தனலட்சுமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து தனலட்சுமி, கூடுவாஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். ஆனால் போலீசார், புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தனது புகார் மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கூடுவாஞ்சேரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என தனலட்சுமி மனுத்தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தனலட்சுமி அளித்த புகாரில் முகாந்திரம் உள்ளது. எனவே அவரது புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து, கல்பனாவிடம் விசாரிக்க உத்தரவிட்டது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது கல்பனா முறையாக ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை, நேற்று முன்தினம் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி பானு முன்பு வந்தது. அப்போது, இவ்வழக்கில் கல்பனா பலமுறை ஆஜராகாததை கண்டித்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். மேலும், இந்த உத்தரவை கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் நந்தகோபால் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

Related Stories: