திருப்பதி அறங்காவலர் குழு 52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனத்துக்கு அதிரடி தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 உறுப்பினர்கள், 4 நிர்வாக குழு உறுப்பினர்கள் என 28 பேருடன் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. இதுதவிர அறங்காவலர் குழுவில் 52 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிப்பதற்கு ஆந்திர மாநில அரசு 2 அரசாணைகளை வெளியிட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், ‘சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தேவஸ்தானத்தின் மீது நம்பகத்தன்மை குறையும்,’ என ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் 3 பொது நலன் வழக்குகள் இரு தினங்களுக்கு முன்பு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் விதிமுறைகளின்படி செய்யப்பட்டதாக  அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், அறங்காவலர் குழுவில்  சிறப்பு அழைப்பாளர்கள்  நியமனத்துக்கு தடை விதித்தும், சிறப்பு அழைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான அரசாணையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.

Related Stories:

>