கோவிஷீல்டு போட்டாலும் தனிமைப்படுத்தும் சர்ச்சை இந்தியாவின் மிரட்டலுக்கு பணிந்தது இங்கிலாந்து அரசு: கட்டுப்பாட்டை தளர்த்தியது

லண்டன்: உரிய பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இந்தியாவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, தனது புதிய சர்வதேச பயணக் கட்டுப்பாடு விதிகளில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை  இங்கிலாந்து அரசு சேர்த்துள்ளது. இங்கிலாந்து அரசு அந்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்தது. அதன்படி, இந்தியர்கள் 2 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டிருந்தாலும், அவர்கள் இங்கிலாந்துக்கு வரும்போது 10 நாட்கள் சுயதனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தி இருந்தது. இந்த விதிகள் வரும் 4ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்தது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘இங்கிலாந்து அரசின் நடவடிக்கை பாரபட்சமானது.

இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், இந்தியாவும் உரிய பதில் நடவடிக்கை எடுக்கும்,’ என்று இந்திய வெளியுறவு செயலர் ஹர்ஷ வர்தன் சிரிங்லா எச்சரித்தார். மேலும், ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் எலிசபெத் டிரசிடம் இது பற்றி கவலை தெரிவித்தார். இந்நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்தும் தனது கட்டுப்பாட்டை இங்கிலாந்து நேற்று ரத்து செய்தது. இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், `அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கோவிஷீல்டு, வேக்ஸ்செவ்ரியா, மாடர்னா டேக்டா ஆகிய தடுப்பூசிகளும், இங்கிலாந்தில் அங்கீகரிக்கப்படுகிறது. இங்கிலாந்து வருவதற்கு 14 நாட்கள் முன்னதாக இந்த தடுப்பூசியை செலுத்தியவர்கள், தனிமைப்படுத்த தேவையில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: