மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ் வழி மாணவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தினால், மருத்துவப் படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மூன்றிலிருந்து 336 ஆக 100 மடங்குக்கும் மேல் அதிகரித்தது. ஆனால், தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 0.30% மட்டும் தான் அதிகரித்து உள்ளது. இதற்கான முக்கியக் காரணம் அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழியில் படித்தவர்கள் கணிசமான அளவில் மருத்துவக்கல்வி வாய்ப்பைக் கைப்பற்றுகின்றனர் என்பது தான். இதை நியாயப்படுத்த முடியாது.

2011ம் ஆண்டில் 5.09 லட்சமாக இருந்த தமிழ்வழி மாணவர்களின் எண்ணிக்கை, 2020ம் ஆண்டில் 4.23 லட்சமாக குறைந்து விட்டது. அதே நேரத்தில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இதே காலக்கட்டத்தில் 2.05 லட்சத்திலிருந்து 3.55 லட்சமாக 75% அதிகரித்திருக்கிறது. இந்நிலையை மாற்றி தமிழ்வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும். தமிழ்வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கையிலும் 20% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதை நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைமுறைப்படுத்த உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீட் ரத்து செய்யப்பட்டாலும் கூட தமிழ்வழி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: