திருப்பதியில் இலவச தரிசனம் 25 முதல் ஆன்லைன் டிக்கெட்: அதிகளவில் கூட்டம் கூடுவதால் முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச டிக்கெட்டுகள், வரும் 25ம் தேதி முதல் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஏழுமலையானை தரிசிப்பதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் வரும் 25ம் தேதி (நாளை மறுதினம்) காலை 9 மணிக்கு  ஆன்லைனில் வெளியிடப்படும். 26ம் தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை ஒரு நாளைக்கு 8 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும். இலவச தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வழங்கியவுடன், திருப்பதி சீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் இலவச தரிசன டிக்கெட் வழங்குவது நிறுத்தப்படும்.

 பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலவச தரிசனத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால், கொரோனா தொற்று பரவும்  அபாயம் உள்ளது. எனவே, இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு வரும் பக்தர்கள் 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: