அடுத்தாண்டு என்பதை ஏற்க முடியாது இந்தாண்டே என்டிஏ நுழைவு தேர்வை பெண்கள் எழுத அனுமதிக்க வேண்டும்: அரசுக்கு உச்ச நீதிமன்றம் கறார் உத்தரவு

புதுடெல்லி: ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு முதல் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்,’ என்ற ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டே சேர்க்கை நடைபெற வேண்டும் என நேற்று அதிரடியாக உத்ரதவிட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்டிஏ) சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். பெண்கள் கலந்து கொள்வதற்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதை  எதிர்த்து குஷ் கால்ரா என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒன்றிய அரசின் இந்த முடிவு, பாலின சமத்துவத்துக்கு எதிரானது.

பெண்களுக்கான சம உரிமையை இது மறுக்கிறது. தேசிய பாதுகாப்பு அகாடமி நுழைவு தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும்,’ என கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஒன்றிய அரசு 2 தினங்களுக்கு முன் தாக்கல் செய்த புதிய பிரமாண பத்திரத்தில், இந்த நுழைவுத் தேர்வில் அடுத்தாண்டு முதல் பெண்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான அறிவிப்பு, அடுத்தாண்டு மே மாதம் வெளியிடப்படும்,’ என தெரிவித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.கே.கவுல், பி.ஆர்.கவாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு தான் பெண்களை சேர்க்க முடியும் என்ற ஒன்றிய அரசின் பிரமாணப் பத்திரம் நிராகரிக்கப்படுகிறது. இந்தாண்டுக்கான நுழைவுத் தேர்வில் பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உறுதியை, ஏற்கனவே அவர்களுக்கு கொடுத்தாகி விட்டது. அதை திரும்பப் பெற முடியாது. இந்தாண்டு நுழைவுத் தேர்வு நவம்பரில் தான் நடைபெற உள்ளது. அதனால், பெண்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய இன்னும் நிறைய அவகாசம் உள்ளது. அதனால், தேசிய பாதுகாப்பு அகாடமியில் இந்தாண்டே பெண்களை அனுமதிக்க வேண்டும். ,’ என தெரிவித்தனர்.

Related Stories: