உபி.யில் தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி மஹந்த் கிரியின் உடல் சமாதியில் அடக்கம்

பிரயாக்ராஜ்: அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவரான மஹந்த் நரேந்திர கிரியின் உடல், பாகம்பரி மடத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்ட சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் பிரசித்தி பெற்ற பாகம்பரி மடம் அமைந்துள்ளது. இதன் மடாதிபதியும், அகில பாரதிய அகாரா பரிஷத் எனும் மிகப்பெரிய துறவிகள் அமைப்பின் தலைவருமான மஹந்த் நரேந்திர கிரி, கடந்த திங்கட்கிழமை, பாகம்பரி மடத்தில் உள்ள தனது அறையில் தூக்கில் சடலமாக கிடந்தார்.

தனது சீடர்களில் ஒருவரான ஆனந்த் கிரி, பெண்ணுடன் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தின் மூலம் தன்னை மிரட்ட திட்டம் தீட்டியிருப்பதால் தற்கொலை செய்து கொண்டதாக மஹந்த் கிரி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். ஆனாலும் இது கொலையா, தற்கொலையா என போலீசார் உறுதிபடுத்தவில்லை. இந்நிலையில், மஹந்த் கிரியின் உடலுக்கு நேற்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் சங்கம் பகுதியின் புனித நீரால் மடாதிபதியின் உடலை குளிப்பாட்டி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் உச்சகட்ட பாதுகாப்புடன், 5 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்து, உடல் பாகம்பரி மடத்தினரிடம் தரப்பட்டது. அதைத் தொடர்ந்து, பாகம்பரி மட வளாகத்தில் எலுமிச்சை மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட சமாதியில் மஹந்த் கிரியின் உடல் பிற்பகல் 3 மணி அளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான துறவிகள் வந்து, வேத மந்திரங்கள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள சீடர் ஆனந்த் கிரியை அலகாபாத் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: