முதல் மற்றும் 2ம் அலையில் கொரோனாவால் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000 இழப்பீடு: மாநில பேரிடர் நிதியில் இருந்து தரப்படும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், இழப்பீடாக வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘கொரோனாவால் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை ஒன்றிய அரசு வழங்கியே தீர வேண்டும்.,’ என உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கொரோனா பாதிப்பால் இறந்ததாக மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

* இந்த இழப்பீடு முதல் மற்றும் 2வது அலையில் இறந்தவர்களுக்கு மட்டுமல்ல, அதன் பிறகும் பலியானவர்களுக்கும் வழங்கப்படும். மறு அறிவிப்பு வரும் வரை இழப்பீடு தொடரும்.

* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த இழப்பீடு வழங்கப்படும்.

* இந்த இழப்பீடு தொகை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

* இதற்காக விண்ணப்பித்து, தேவையான ஆவணங்களை சமர்பித்த பிறகு 30 நாட்களுக்குள் ஆதார் உதவியுடன் நேரடியாக வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

* விண்ணப்ப முறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அல்லது மாவட்ட நிர்வாகம் வகுக்க வேண்டும்.

* உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அவற்றை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆய்வு செய்து, தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இழப்பீடு தொகையை விடுவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

* புகார்களை நிவர்த்தி செய்ய பிரத்யேக குழு

கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பாக மக்களின் புகார்களை தீர்க்க பிரத்யேக குழு அமைக்கவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்ட துணை கலெக்டர், தலைமை மருத்துவ அதிகாரி, உள்ளிட்டோரை கொண்ட குழுவினர் கொரோனா மரணம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய வேண்டும். ஒருவேளை இந்த குழுவின் முடிவு, உரிமை கோருபவருக்கு சாதகமாக இல்லை எனில் அதற்கான விரிவான காரணங்களை விளக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: