பத்பநாபசுவாமி கோயிலின் 25 ஆண்டு கால கணக்கு தணிக்கையை முடிக்க கெடு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: கேரளாவில் உள்ள புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் தொடர்பான வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு, ஜூலை 13ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ‘கோயில் நிர்வாகத்தில் மன்னர் குடும்பத்துக்கே முழு உரிமை உள்ளது. இருப்பினும், கோயிலை கண்காணிக்க மாவட்ட நீதிபதியின் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இதில், இடம்பெறும் அனைவரும் கண்டிப்பாக இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும். கோயிலின் 25 ஆண்டு கால வரவு, செலவு கணக்குகள் அனைத்தம் தணிக்கை செய்யப்பட வேண்டும்,’ என கூறப்பட்டது.

இந்நிலையில், 25 ஆண்டு கால வரவு, செலவை தணிக்கை செய்யும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து,  திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில், ‘கோயிலின் வருமானத்தை விட செலவுதான் அதிகமாக உள்ளது. இதற்கு பொறுப்பேற்க வேண்டிய அரச குடும்ப அறக்கட்டளை, இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க முயல்கிறது. ,’ என கோயில் நிர்வாக குழு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறக்கட்டளை, ‘கோயிலின் பூஜை வழிபாடு சார்ந்த விவகாரங்களை மட்டுமே அரச குடும்ப அறக்கட்டளை கவனிக்கும்.

கோயில் நிர்வாகத்துக்கும் அதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. எனவே, அறக்கட்டளையின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை,’ என கூறப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், ‘கோயிலின் 25 ஆண்டு கால கணக்கு தணிக்கை செய்யப்படுவதில் இருந்து திருவிதாங்கூர் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்க முடியாது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த கணக்கு தணிக்கையை முழுவதுமாக முடிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டப்பட்டது.

Related Stories:

>