ஜெயங்கொண்டம் அருகே ரூ.1.80 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்பு: 3 ஏஜெண்டுகள் சிக்கினர்

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே ரூ.1.80 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 மாத பெண் குழந்தை கோவையில் மீட்கப்பட்டது. இது தொடர்பாக ஏஜெண்டுகள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள வடவீக்கம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மீனா(27). இவர்களுக்கு 9 வயது, 4 வயது மற்றும் 3 வயதில் ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமடைந்த மீனாவுக்கு, 3 மாதங்களுக்கு முன் 4வது பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ என்று பெயரிட்டனர். இந்நிலையில் சரவணன்- மீனா தம்பதி 4வதாக பிறந்த குழந்தை சுபஸ்ரீயை ஒருவருக்கு ரூ.1.80 லட்சத்துக்கு விற்று விட்டதாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அவர் விஏஓ செல்வராஜுடன் சரவணன் வீட்டுக்கு சென்றார். அப்போது சரவணன் வீட்டில் யாரும் இல்லை. அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில், கடைசியாக பிறந்த 3 மாத பெண் குழந்தையை ரூ.1.80 லட்சத்திற்கு விற்றது தெரியவந்தது. இதையடுத்து தந்தை சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் துரைமுருகன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு குழந்தையின் தந்தை சரவணனை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் கோவையை சேர்ந்த ஒருவரிடம் விற்பதற்காக ஏஜெண்டுகள் குழந்தையை ரூ.1.80 லட்சத்துக்கு வாங்கிச்சென்றிருப்பதை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார் கோவை  சென்று குழந்தையை விற்பதற்கு காத்திருந்த ஏஜெண்டுகளான ஈரோட்டை சேர்ந்த ராஜேந்திரன், செந்தில்குமார் மற்றும் மண்ணச்சநல்லூரை சேர்ந்த முத்தையனை பிடித்தனர். அவர்களிடம் இருந்து குழந்தையையும் மீட்டனர். இதையடுத்து குழந்தை, ஏஜெண்டுகளை இன்று ஜெயங்கொண்டம் அழைத்து வந்தனர். ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஏஜெண்டுகள், குழந்தையின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை யாருக்காக வாங்கிச்செல்லப்பட்டதா, இதன் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: