தலிபான் அமைச்சரை அனுமதிக்க கோரியதால் ‘சார்க்’ வௌியுறவு அமைச்சர்கள் கூட்டம் ரத்து: பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிப்பு

நியூயார்க்: சார்க் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் தலிபான் அமைச்சரை பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியதால், திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் 76வது கூட்டம் நேற்று நியூயார்க்கில் தொடங்கியது. முன்னதாக நியூயார்க்கில் நடைபெறவிருந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வெளியான செய்தியில், ‘சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்த தலிபான்களை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தியது. இதற்கு உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.

மேலும், தலிபான் பிரதிநிதி பங்கேற்க அனுமதிக்கும்படி பாகிஸ்தான் கோரியதை இந்தியாவும் எதிர்த்தது. ஒருமித்த கருத்தின் அடிப்படையில், வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேபாளம் நாடு செய்திருந்தது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆப்கான் அரசை கைப்பற்றிய தலிபான்களை, இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அமீர்கான் முத்தாகி என்பவர் தலிபான் அமைச்சரவையில் வெளியுறவு துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டும், அவரை ஐ.நா அங்கீகரிக்கவில்லை. அதனால், அவர் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ள முடியாது. கடந்த வாரம் நடந்த எஸ்சிஓ கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தலிபான்களின் அரசை ஏற்றுக்கொள்வது குறித்தும், அங்கீகரிப்பதற்கு முன்பு உலக நாடுகள் சிந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>