×

யோகாசனம் கத்துக்கலாமா?

‘‘உடல் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க யோகாசனம் அவசியம்’’ என்கிறார் யோகாசன பயிற்சியாளர் வெற்றிவேல். சென்னையில் பயிற்சி மையத்தை நடத்தி வரும் இவர் தேசிய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளார்.யோகாசனம் செய்பவர்கள் ஒழுங்கான உணவை அளவாக சாப்பிட வேண்டும். காலையில் இரண்டு இட்லி, தோைச அல்லது சப்பாத்தி சாப்பிடலாம். மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரத்தில் பசிச்சா பழங்கள் சாப்பிடலாம். மதியம் கொஞ்சம் சாதம், நிறைய காய்கறி, கூட்டு வகைகள், நார் சத்துள்ள உணவுகள், கீரைகள் சாப்பிடுவது நல்லது. இரவு சீக்கிரமே சாப்பிடவேண்டும். அப்போது தான் அது செரிமாண பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். இரவு நேரம் இரண்டு சப்பாத்தியும் பழங்களும் சாப்பிடலாம். அசைவ உணவினை சாப்பிடுபவர்கள் கொஞ்சம் உணவில் கட்டுப்பாட்டோடு இருப்பது அவசியம். இப்படி திடமான உணவுகளோடு மற்றும் கட்டுப்பாட்டுடன் யோகாசனம் செய்து வந்தால் எப்போதும் இளமையாகவும் இருக்கலாம்.’’ என்றவர் சில ஆசனங்களையும் அதற்கான பலன்களையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார்.

உபவிஸ்தகோணாசனம்

கால்கள் இரண்டையும் நன்கு விரித்து இரண்டு கைகளால் கால்களின் கட்டை விரலைப் பிடித்து நெற்றி தலையை தொடும் அளவு குனிய வேண்டும். மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்கு இது சிறந்த ஆசனம்.

சக்ராசனம்

தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். கால்களை நன்றாக மடிக்க வேண்டும். அதே சமயம் கைகளை தரையில் ஊன்றி, படுத்த நிலையில், இடுப்பை மட்டும் மேலே தூக்க வேண்டும். இதனால் முதுகுத் தண்டு வலுவடையும். இரண்டு சக்கர வாகனத்தில் அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கும், நீண்ட நேரம் உட்காந்த நிலையில் வேலை பார்ப்பவர்களுக்கும் இந்த ஆசனம் நல்ல பலனை கொடுக்கும்.

பட்சிமோதாசனம்


நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கால்களை நேராக நீட்டி, கால் பெருவிரல்களை ஆள்காட்டி விரலால் பிடித்து நெற்றி முழங்காலை தொடும் அளவு குனிய வேண்டும். அதாவது கைகளின் முட்டி தரையில் தொடும் படி இருக்க வேண்டும். அந்த ஆசனத்தை தினமும் செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும். மூலம், நீரிழிவு போன்ற நோய்கள் வராது. இடுப்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும்.

தனுராசனம்

தரையில் குப்புற படுத்துக் கொண்டு கைகளை உடலின் பக்காவாட்டில் வைக்கவும். கால்களை உயர்த்தி, கணுக்காலை பிடிக்கவும். மார்பை மேலே உயர்த்தவும். உடல் எடை முழுவதும் வயிற்றுப் பகுதி தாங்க வேண்டும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால், வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் வலுவடையும். தொப்பை குறையும். முதுகு தண்டு வலுவாகும். இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பு கரையும், மாதவிடாய் பிரச்னை தீரும்.

சர்வங்காசனம்

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு கால்களை மட்டும் மேலே தூக்க வேண்டும். அதே சமயம் கைகள் இடுப்பை தாங்கி பிடிக்க வேண்டும். கண்களும், கால்களிலுள்ள விரல்களும் நேர் கோட்டில் இருக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி அதிகரிக்கும்.

ஜனுசீராசனம்


கால்களை நேராக நீட்டி, தரையில் அமர வேண்டும். படத்தில் இருப்பது போல் ஒரு காலை மடக்கி மற்றொரு காலை நீட்டி அதன் கட்டை விரலை பிடித்து நெற்றி முழங்காலை தொடும் அளவுக்கு வளைய வேண்டும். கைகளின் முட்டி தரையில் தொட வேண்டும். இதனால் கர்ப்பப்பை தசைகள், சிறுநீரகம் வலுவடையும். தொப்பை குறையும். மலக்குடல், கணையம், மண்ணீரல், கல்லீரல் வலுவடையும். முதுகு வலி, இடுப்பு வலி நீங்கும்.

கந்தராசனம்

முதலில் தரையில் மல்லாந்து படுக்கவும். அதே நிலையில் கால்களை மட்டும் மடித்து இடுப்பு பகுதியை மேலே தூக்கவும். கனுக்கால் இரண்டையும் இரண்டு கைகளால் பிடிக்கவும். இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் தோள்பட்டையில் உள்ள வலி நீங்கும். தைராய்டு பிரச்னையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். முதுகுவலி குணமாகும்.

உசரட்டாசனம்


முழங்காலை பின்புறமாக மடித்து மண்டி இடுவது போல் அமர்ந்து இரண்டு கைகளை பாதங்கள் மேல் வைத்து உடலை வில் போல் வளைக்க வேண்டும். இந்த ஆசனம் செய்வதால் தோள்பட்டை வலுவடையும். மார்பு பகுதி விரிவடையும். சளி மற்றும் ஆஸ்துமா பிரச்னை நீங்கும்.

பத்மாசனம்

சமமான தரையில் வலது காலை மடித்து இடது தொடை மீது வைக்கவும். அதே போல் இடது காலை மடித்து வலது தொடை மேல் வைக்கவும். அதே நிலையில் கண்களை மூடி மனதை அமைதியாக வைத்து மூச்சை சீராக விடவும். இந்த ஆசனத்தால் இடுப்பு பகுதியில் ரத்த ஓட்டம் சீராகும். முதுகு எலும்பு வலுவடையும், நன்றாக பசி எடுக்கும். வாதம் நீங்கும். நுரையீரல் பலப்படும். நரம்பு வலிமை அடையும்.

-ஷம்ரிதி

Tags :
× RELATED கொரோனாவிலிருந்து மக்கள் விடுபட...