ஆரோக்கியம் உங்கள் விரல்நுனியில்

நன்றி குங்குமம் தோழி

 இந்த காலத்தின் மிகப் பெரிய பொக்கிஷம் நம்முடைய ஆரோக்கியம். வாழ்க்கையின் லைஃப்ஸ்டைல் மாற்றத்தின் காரணமாக பலர் பல விதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், இருதய பிரச்னை... இவை எல்லாம் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. இந்த பிரச்னை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

அதனால் ஒவ்வொருவரும் ஆரோக்கியம் குறித்து விழித்துக் கொள்வது அவசியம். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில். அதனை நீங்கள் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ கற்றுக் கொள்ளவே, பல ஆப்கள் உள்ளன. அவை உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆயுர்வேதிக் லைஃப்ஸ்டைல்: Ayurvedic Lifestyle

உங்களின் உணவுப்பழக்கம் முற்றிலும் தவறு என்றால், எந்த மருந்து சாப்பிட்டாலும் பயனளிக்காது. அதுவே உங்களின் உணவுப்பழக்கம் சரியாக இருந்தால், மருந்துகளின் அவசியம் இருக்கவே இருக்காது. ஆயுர்வேத முறையில் ஆரோக்கியம் என்பது நம்முடைய புத்தி, ஆத்மா மற்றும் உடல் இந்த மூன்றின் சமநிலை. ஆயுர்வேத முறைகள் மூலம் நாம் ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை

ஏற்படுத்த முடியும்.

நம்முடைய உடல் காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி மற்றும் விண்வெளி கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் நம்முடைய உடலுக்கு ஒரு வித சக்தியை கொடுக்கிறது. இயற்கையோட ஒன்றி ஆரோக்கியமாக வாழும் வாழ்க்கை முறையைதான் ஆயுர்வேதம் குறிக்கிறது. காலையில் எழுந்து வேலை செய்வது, சாப்பிடுவது, குடிப்பது மற்றும் தூங்குவது என்று எந்த சிக்கல் இல்லாமல் தான் நம் வாழ்க்கை நகர்ந்து கொண்டு இருக்கிறது.

ஆனால் நம் முன்னோர்கள் தினமும் நாம் காலை, இரவு மற்றும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பிட்டுள்ளனர். அவை என்ன மற்றும் என்ன மாதிரியான உணவினை நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த ஆப் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தனிப்பட்ட மனநிலை மற்றும் உடலமைப்பு கொண்டு இருப்பார்கள்.

அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப ஏற்படும் மாற்றங்களால் நமக்கு சில உடல் உபாதைகள் ஏற்படும். அந்த பிரச்னைகள் நம்மை பாதிக்காமல் இருப்பதற்கு முன்கூட்டியே வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சின்னச் சின்ன பாட்டி ைவத்தியம் குறித்த டிப்சுகளும் இங்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயுர்வேத நிபுணரிடம் உங்கள் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை கேள்வியாக எழுப்பினால் அதற்கான விடைகளையும் அவர்கள் அளிப்பதன் மூலம் உங்களின் பிரச்னைக்கான தீர்வும் எளிதாகிறது. இயற்கையோடு இணைந்து ஆரோக்கிய வாழ்வினை கடைபிடியுங்கள்.

ஹெல்த்திஃபைமீ:  HealthifyMe

ஆரோக்கியமாக உணவு சாப்பிடுவது இன்றைய காலக்கட்டத்தில் கட்டாயமாகிவிட்டது. ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப எடை இருக்க வேண்டும். அதை தாண்டும் போது, அவர்கள் தங்களின் உணவுப் பழக்கத்ைத மாற்றி அமைக்க வேண்டும். இப்போது மார்க்கெட்டில் பலவிதமான டயட் முறைகள் உள்ளன.

எல்லாவற்றையும் எல்லாரும் பின்பற்ற முடியாது. அவரவருக்கு ஏற்ப என்ன டயட் முறைகளை பின்பற்றலாம் என்பதை இந்த ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஆண், பெண் இருவரும் தங்களின் எடையை குறைக்க விரும்பினால், இந்த ஆப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். என்ன சாப்பிட வேண்டும், அதன் கலோரியின் அளவு என்ன என்பது மட்டும் இல்லாமல், என்ன மாதிரியான உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் டயட் சார்ட் முதற்கொண்டு இதில் வழங்கப்படுகிறது.

உடல் எடை குறைப்பது அவ்வளவு கடினமானது அல்ல. நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரியின் அளவைக் கட்டுப்படுத்தினாலே போதும், நீங்களும் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

இதில் உள்ள முக்கிய அம்சங்கள்

1. ஹெல்த்திஃபைமீ மூலம் உங்களின் ஆரோக்கியம் மற்றும் பி,எம்.யை கொண்டு ஒரு டயட் சார்ட் தயாரிக்கப்படும். அதன் மூலம் நீங்கள் உங்களின் டயட் மற்றும் உடற்பயிற்சி முறைகள் என்ன என்று தெரிந்துக் கொள்ளலாம்.

2. நியூட்ரிஷன் மற்றும் கலோரி கால்குலேட்டர் மூலம் நீங்கள் என்ன ஆரோக்கியமான உணவினை சாப்பிடலாம் என்று பிளான் செய்யலாம். மேலும் உங்களின் டயட்டுக்கு ஏற்ப உணவு சமையல் முறைகளும் இதில் வழங்கப்படுகிறது. சர்வதேச முறை உணவுகள் மட்டும் இல்லாமல் நம் பாரம்பரிய உணவுகளும் இருப்பதால், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப சமைத்து சாப்பிடலாம்.

3. டயட் இருக்க ஆரம்பித்தவுடன் உங்களின் எடை குறைவு மற்றும் கொழுப்பின் அளவினை அவ்வப்போது கணக்கிட்டு பார்க்கலாம். இதன் மூலம்

உங்களுக்கு தேவையான கலோரிகள் என்ன என்று அறிந்து கொண்டு, அதை பின்பற்றி வருவதன் மூலம், என்றுமே ஆரோக்கியமாக இருக்க உதவும்.

4. 24 மணி நேரமும் உங்களின் டயட் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக உணவு ஆலோசகர்கள் உள்ளனர். அதனால் உங்களின் கேள்விகளுக்கு

உடனடி தீர்வுகள் அளிக்கப்படும்.

இன்றே உங்களின் கலோரிகளை கணிக்கிடுங்கள், உடல் எடைக் குறைத்து ஆரோக்கியமாக வாழுங்கள்.

ஹெல்த் பால்:   Health Pal

இந்த ஆப் உங்களை எப்போதும் பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். ஒருவரின் தினசரி நடவடிக்கைகளை இதன் மூலம் கண்காணிக்கலாம். அதாவது நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீங்க சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளின் அளவு, எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என அனைத்தையும் உங்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்தும்.

அதுமட்டும் அல்லாமல், இவற்றில் நீங்கள் தவறாக பின்பற்றி வந்தாலும், அதை எவ்வாறு சரியாக செய்ய வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் உங்களின் தினசரி ஆரோக்கியம் குறித்த அறிக்கைகளும் உங்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்ச்சியை தூண்டிக் கொண்ேட இருக்கும்.

இதில் உள்ள முக்கிய அம்சங்கள்

* பொதுவாக உடற்பயிற்சி செய்வது குறித்து மட்டுமே ஆலோசனை தருவது வழக்கம். ஆனால் ஹெல்த் பால் ஒருவரின் தண்ணீர் உட்கொள்ளும் அளவு மற்றும் அவர்களின் டயட் குறித்தும் நினைவுபடுத்தும்.

* நடைப்பயிற்சி செய்யும் போதே நீங்கள் எவ்வளவு அடி மற்றும் தூரம் நடந்து இருக்கிறீர்கள் மற்றும் இதன் மூலம் எவ்வளவு கலோரிகள் இழந்து இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

* தினமும் நீங்கள் நடக்கும் தூரத்தினை குறித்து புள்ளிவிவரங்கள் மற்றும் வரைபடம் மூலம் அறிந்து கொள்வதை சுலபமாக்குகிறது.

* ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைவுபடுத்தப்படும்.

* நேரத்திற்கு காலை சிற்றுண்டி, மதியம் மற்றும் இரவு நேர உணவினை சாப்பிடச் சொல்லி நினைவூட்டும்.

* உங்கள் ஆரோக்கியம் குறித்த நினைவூட்டல்களை நீங்கள் உருவாக்கலாம், நிர்வகிக்கலாம் மற்றும் திருத்தம் கூட செய்யலாம். நினைவு படுத்த தேவையில்லை என்று நினைத்தாலும் அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் செய்யலாம்.

* எந்த ஒரு உபகரணம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தின் உதவி இல்லாமல் ஒருவரின் தேவைக்கு ஏற்ப அவர்களுக்கான உடற்பயிற்சியினை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

* நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அதனை கண்காணிக்கவும் செய்யலாம்.

* உங்களின் முந்தைய எடை மற்றும் அதில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் குறித்து கண்காணிக்கலாம்.

* உணவு மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர்கள் அளிக்கும் டிப்ஸ்களை பின்பற்றலாம். அதே சமயம் மருத்துவம் சார்ந்த சிகிச்சை முறைகளை அந்த துறை சார்ந்த நிபுணர்களை நேரடியாக அணுகி ஆலோசனை பெறவும்.

ஜிவா ஹெல்த் ஆப்: Jiva Health App

 ஆரோக்கியத்தை குறித்து நம்பகத்தன்மையான மற்றும் உடனடியாக செயல்படக்கூடிய விரல்நுனியில் தெரிந்து ெகாள்ள உதவும் ஆப்தான் ஜிவா ஹெல்த் ஆப். இதில் ேதர்ந்தெடுத்த மருத்துவ நிபுணர்கள் ஆரோக்கியம் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகள் குறித்து தீர்வு அளிக்கிறார்கள்.

ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் பல... அதில் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான பிரச்னைகள்.

அவரவர் பிரச்னைக்கு ஏற்ப தீர்வுகளும் இங்கு வழங்கப்படுகிறது. ேமலும் அனுபவமிக்க நிபுணர்கள் உங்களின் கேள்விக்கு பதிலும் அளிப்பதால், உடனடி தீர்வும் கிடைக்கிறது. இதன் மூலம் சிகிச்சை பெறும் போது, நோயாளிகளின் சிகிச்சை முறைகள் மற்றும் அவர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகள் என அனைத்தையும் இதில் பதிவு செய்யலாம்.

இதனால், ஒருவர் அவர்களின் ஆரோக்கியம் சார்ந்த பதிவு குறித்து அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்து கொள்ள மிகவும் உதவியாக உள்ளது. இந்த ஆப் மூலம் ஒருவரின் சருமம், லைஃப்ஸ்டைல், அஜீரணம், மூட்டு வலிகள் போன்ற பிரச்னைகள் மட்டும் இல்லாமல் 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கான தீர்வுகள் உடனடியாக பெறமுடியும். ஆப்பினை உங்கள் செல்போனில் டவுண்லோட் செய்து பலன் பெறுங்கள்.

ஹெல்த்கார்ட் ஷாப்பிங் :  HealthKart Shopping App

ஆரோக்கியம் அவசியம்தான், அதே சமயம் ஆரோக்கியமாக இருக்க நம் உடலுக்கு தேவையான உணவுகள் மற்றும் சப்ளிமென்ட்களை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். உங்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான சரியான சப்ளிமென்ட் என்ன என்று அறிந்து அதனை இந்த ஆப் மூலம் ஷாப்பிங் செய்யலாம்.

பொதுவாக ஒருவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புரதம், மல்டிவிட்டமின்கள் மிகவும் அவசியம். அது சார்ந்த உணவுகள் மற்றும் சப்ளிமென்ட்கள் இதில் உள்ளது. அதனை நீங்கள் டாக்டரின் பரிந்துரைக்கு ஏற்ப தேர்வு செய்து ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். உணவுப் பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும், நியாயமான விலையிலும் கிடைக்கிறது.

இந்த ஆப்பினை முதலில் உங்களின் கைபேசியில் டவுண்லோட் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள உணவுகளை தேர்வு செய்யலாம். பிறகு ஆர்டர் செய்தால் போதும், அனைத்தும் உங்கள் வீடு தேடி வரும். இதில் புரதம், ஆப்பிள் சிடார் வினிகர், கொழுப்பினை கரைக்க உதவும் உணவுகள், மல்டிவிட்டமின்கள், மீன் எண்ணை மாத்திரைகள், ஆலுவேரா ஜூஸ், நீரிழிவு குறித்த மருந்துகள்... என எண்ணற்ற சப்ளிமென்டுகளின் பட்டியல்கள் உள்ளன.

கார்த்திக் ஷண்முகம்

Related Stories: