×

மதுரை கியூ பிரிவு போலீசார் அதிரடி இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு ஆட்களை கடத்தி வந்த படகு பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து சமீபகாலமாக பொருட்கள் கடத்தல் மட்டுமல்லாமல் ஆட்களையே கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. சட்டவிரோதமாக அழைத்து வரப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் மங்களூரூவில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மங்களூருரில் இருந்து கனடா செல்ல இருந்த போது பிடிபட்டனர். இதே போன்று மதுரை அருகே இலங்கையை சேர்ந்த 27 பேரை மதுரை கியூ பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களும் இலங்கையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து, அங்கிருந்து மதுரைக்கு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் இலங்கையில் இருந்து வந்தவர்களில் கணவன், மனைவி 2 பேர் மாயமாகினர். அவர்களை மதுரை கியூ பிரிவு போலீசார் கீழவைப்பார் பகுதியில் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தூத்துக்குடியில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அந்த படகு பறிமுதல் செய்யப்பட்டு லாரியில் மதுரை கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரூவில் இலங்கையை சேர்ந்த 40 பேரை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 4 பேர் அடங்கிய குழுவினர் தூத்துக்குடியில் முகாமிட்டு அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணையில் மேலும் சிலர் சிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Madurai Q Division police ,Sri Lanka ,Thoothukudi , Madurai Q Division police seize boat carrying people from Sri Lanka to Thoothukudi
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...