×

வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் ரூ.450 கோடியில் புதிய வடிகால்கள்: நீர்வளத்துறை அதிகாரி தகவல்

சென்னை: வடசென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், ஆபத்தான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு ரூ.450 கோடியில் புதிய வடிகால்கள் அமைக்கப்படுவதாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது ஒரே நாளில் 45  செ.மீ மழை பதிவானதாலும், ஏரிகளில் உபரி நீர் திறக்கப்பட்டதாலும், அடையாறு, கூவம், கொசஸ்தலையாற்று பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், ஆற்றுப்படுகையின் கரைகள் உடைந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததது. இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து சென்னையில் இனி வருங்காலங்களில் வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் 12க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் வெள்ள பாதிப்பு, வெள்ளத்துக்கான காரணம் என அனைத்தையும் கண்டறிந்து அறிக்கையை சமர்பித்தது. அதில், சென்னை மாநகரில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 306 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 37 இடங்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, செயலிழந்துள்ள கால்வாய்களை சீரமைக்கவும், சென்னையில் புதிதாக 334 இடங்களில் மழைநீர் வடிகால்கள் கட்டவும் அரசுக்கு பரிந்துரை செய்தது.

அதன்பேரில், சென்னையில் வெள்ள தடுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ரூ.290 கோடியில் தாம்பரம், முடிச்சூர், குன்றத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வடிகால்கள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த திட்டத்தின் கீழ், வட சென்னை பகுதிகளான கொடுங்கையூர், மாதவரம், திருவொற்றியூர், கொரட்டூர், ரெட்டேரி உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் வெள்ள தடுப்பு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ரூ.35 கோடியில், கொடுங்கையூர் தணிகாசலம் நகர் முதல் மாதவரம்  வரை 3 கி.மீ நீளத்துக்கு வடிகால் அமைக்கப்படுகிறது. ரூ.30 கோடியில், போரூர் ஏரியில் இருந்து உபரி நீர் 3.50 கிமீ நீளத்துக்கு கால்வாய் அமைத்து திருப்பி விடப்பட உள்ளது.

 ரூ.50 கோடியில் கொரட்டூரில் இருந்து உபரி நீரை திருப்பி விடும் வகையில் வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையப்படுத்தப்படுகிறது. அதே போன்று ரூ.150 கோடியில் மாதரவம் ஏரி, ரெட்டேரி ஏரியில் இருந்து உபரி நீரை வெளியேற்றும் கால்வாய் அமைத்து திருப்பி விடப்பட உள்ளது. இந்த கால்வாய், எண்ணூர் கொசஸ்தலை ஆறு வரை அமைக்கப்படுகிறது. இதன் மூலம், உபரி நீர் எளிதாக கடலில் கலக்கிறது. இந்த திட்டம் ரூ.450 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, நீர்வளத்துறை சார்பில் அரசுக்கு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது. இந்த அறிக்கைக்கு விரைவில் அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் இப்பணிகள் தொடங்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக 306 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், 37 இடங்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.


Tags : North Chennai , Rs 450 crore new drains to prevent floods in North Chennai: Water Resources Officer
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...