மிரட்டலுக்கு பணிந்தார் ரங்கசாமி மாநிலங்களவை தேர்தலில் பாஜ போட்டி: புதுச்சேரி வேட்பாளராக செல்வகணபதி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தல் அக்.4ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிகிறது. இதற்காக தேஜ கூட்டணி கட்சிகளான என்ஆர் காங்கிரஸ், பாஜ இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பாஜக மற்றும் ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, பாஜவுக்கு அந்த இடத்தை தரும்படி கேட்டு முதல்வர் ரங்கசாமியிடம்  கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து அகில இந்திய கட்சி தலைமை ரங்கசாமியிடம் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தியது. அப்போது மாநிலங்களவையில்  ஒவ்வொரு சீட்டும்  பாஜவுக்கு முக்கியமானது எனக்கூறி முதல்வர் ரங்கசாமிக்கு அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எம்எல்ஏக்களை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

பாஜவின் செயல்பாடுகள் குறித்து எம்எல்ஏக்கள் கொந்தளித்தனர். அப்போது அவர், பாஜ தரப்பில் மிகவும் அழுத்தம் கொடுக்கிறார்கள், நமக்கு மாநில வளர்ச்சிதான் முக்கியம்  எனக் கூறினார். இதனால் வெறுத்துபோன  எம்.எல்.ஏக்கள்,  முதல்வரை சரணடைய வைத்துவிட்டதாக புலம்பியபடி சென்றனர். இதனை தொடர்ந்து எப்போது வேண்டுமானால் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானது. காரைக்காலை சேர்ந்த ஜி.என்.எஸ்.வாசுவா, ஐசரி கணேஷா, சீனியரான செல்வகணபதியா யாரை நிறுத்துவது என கடும் இழுபறி நீடித்த நிலையில், பாஜ எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், சுயேட்சை எம்எல்ஏக்கள்  நேரு, பி.ஆர். சிவா ஆகியோர் கவர்னர் தமிழிசையை சந்தித்து தங்கள் கருத்தை தெரிவித்துவிட்டு வந்தனர். இதற்கிடையே  இறுதி கட்ட முயற்சியாக  கவர்னர் தமிழிசையை நேற்று மாலை ரங்கசாமி மீண்டும் சந்தித்து பேசினார்.

அப்போது என். ஆர் காங்கிரஸ் தரப்பில் டாக்டர் நாராயணசாமி அல்லது மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் போட்டியிட எம்எல்ஏக்கள் விரும்புவதாகவும், அகில இந்திய பாஜவுக்கு இதை தெரியப்படுத்தி நல்லதொரு முடிவை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால் இதனை அகில இந்திய பாஜ தலைமை உடனடியாக நிராகரித்தது. இதையடுத்து நேற்றிரவு பாஜ தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், மாநிலங்களவை வேட்பாளராக எஸ். செல்வகணபதி போட்டியிடுவார் என தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் பள்ளிக்கூம் நடத்தி வரும் செல்வகணபதி ஏற்கனவே நியமன எம்எல்ஏவாக இருந்தவர்.

Related Stories: