கொடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்தபோது தற்கொலை செய்து கொண்ட கம்ப்யூட்டர் ஆபரேட்டரின் குடும்பத்தினரிடம் விசாரணை: ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் விபத்து வழக்கையும் மீண்டும் விசாரிக்க தனிப்படை திட்டம்

ஊட்டி: கொடநாட்டில் உள்ள ஜெயலலிதா பங்களாவில் கடந்த 23.4.2017ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இதில், முக்கிய குற்றவாளியான ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் சேலத்தை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். சயான், கேரளாவை சேர்ந்த வாளையார் மனோஜ், சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி, திபு, ஜித்தின் ஜாய், சம்சீர் அலி, உதயகுமார் உட்பட 10 பேரை கோத்தகிரி சோலூர்மட்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராக சயான் இவ்வழக்கில் மீண்டும் பல உண்மை தகவல்களை தெரிவிக்க உள்ளதாக கூறி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிமன்ற அனுமதியுடன் கடந்த மாதம் 17ம் தேதி சயானிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதுமட்டுமின்றி அரசு வக்கீல்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் முழுமையான விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து விசாரணை மீண்டும் நடந்து வருகிறது. இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால், கனகராஜின் மனைவி, மைத்துனர், அவரது நண்பர்கள், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், குற்றவாளி ஜம்சீர் அலி, கொலை நடந்த அன்று பணியில் இருந்த போலீசார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், கடந்த 2017-ல் கொடநாட்டில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமாரின் தற்கொலை வழக்கையும் மீண்டும் விசாரணை மேற்கொள்ள  போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று முன்தினம் கோத்தகிரி தாசில்தாரிடம் அனுமதி கேட்டு தனிப்படை போலீசார் மனு அளித்திருந்தனர். அனுமதி கிடைத்ததால் நேற்று முன்தினம் மாலை தினேஷ்குமாரின் தந்தை போஜனிடம் அவரது இல்லத்தில் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். நேற்று காலை தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் தினேஷ்குமாரின் சகோதரி ராதிகாவை வீட்டிற்கு அழைத்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவரிடமும் 3 மணி நேரம் விசாரணை நடந்தது. இவர்கள் இருவரும் பல்வேறு தகவல்களை அளித்துள்ளதாக தெரிகிறது. கொடநாடு கொள்ளை வழக்கு, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தற்கொலை வழக்குகளை தொடர்ந்து, முக்கிய குற்றவாளி கனகராஜின் விபத்து வழக்கையும் மீண்டும் கையில் எடுக்க உள்ளனர். அதனால், பல்வேறு உண்மையான தகவல்கள் வெளியாகும் தெரிகிறது.

* குற்றவாளிகளுக்கு சம்மன்

கொடநாடு கொலை வழக்கில், கேரளாவில் உள்ள குற்றவாளிகள் சந்தோஷ்சாமி, மனோஜ்சாமி ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இவர்கள் இருவரிடமும் இன்று ஊட்டியில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என தெரிகிறது. திபு, ஜித்தின் ஜாய் ஆகியோருக்கு வருகிற 24ம் தேதி ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Related Stories: