குரும்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.2 கோடி மோசடி தலைவர் நீக்கம்: சார்பதிவாளர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்

திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூரில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் 500க்கும் மேற்பட்டோருக்கு கடனுதவி வழங்கப்பட்டது. இதனிடையே தமிழக அரசின் 5 பவுன் தங்க நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பை அடுத்து வங்கி வாரியாக நகை கடன் தள்ளுபடி சலுகை யாருக்கு எல்லாம் கிடைக்கும் என்பது குறித்து அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதற்காக ஆய்வு நடத்தியபோது மொத்தம் நகை கடனாக பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில், 261 பொட்டலங்கள் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 மோசடி அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து வங்கி தலைவர் முருகேசப் பாண்டியன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், கூட்டுறவு சார்பதிவாளர் ஆழ்வார்குமார், செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் 2ம் நாளாக குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நேற்று வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, பணம் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் வங்கிக்கு திரண்டு வந்து தாங்கள் ஏற்கனவே செய்துள்ள டெபாசிட் பணம் குறித்த விவரம் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

* வங்கி தலைவர் ராஜினாமா 3 எழுத்தர்கள் சஸ்பெண்ட்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 14 கணக்குகளில் மாற்றுக் குறைந்த தங்கம் உள்ளிட்ட நகைகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன் கொடுத்திருப்பது, அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு எழுத்தர்களாக பணியாற்றி வந்த சரோமணி(56), சிவலிங்கம்(48), சுந்தரராஜ் (46) ஆகிய 3 பேர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் முறைகேடு நடந்த சங்கத்தின் தலைவரும், மல்லசமுத்திரம் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன்(65) கூட்டுறவு சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கூட்டுறவு சங்க அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இங்கு பயிர் கடன் வழங்கியதில் மோசடி நடந்திருப்பதாகவும், கூட்டுறவு கடன் சங்கங்களில் அடகு வைக்கப்பட்டுள்ள நகைகளை கேரட் மீட்டர் கொண்டு ஆய்வு செய்தால், மேலும் பல மோசடி வெளிப்படும் எனவும் புகார் கூறப்படுகிறது.

Related Stories:

>