வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி வாகை சூட வேண்டும்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேச்சு

திருப்போரூர்: உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதையொட்டி, இந்த தேர்தலிலும், வெற்றி வாகை சூட வேண்டும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் விநியோகம் மற்றும் தாக்கல் ஆகியவை கடந்த 15ம் தேதி தொடங்கியது. இதில், நேற்று வரை 2 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு 14 பேர், 22 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு 92 பேர், 50 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 221 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.  இன்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. எனவே, இன்று ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, திருப்போரூர் ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருப்போரூரில் நேற்று நடந்தது. திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இதயவர்மன் தலைமை தாங்கினார். திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் வரவேற்றார். எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊரகத் தொழில் துறை அமைச்சரும், காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன், கலந்து கொண்டு திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது. திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய 50 ஊராட்சி மன்ற தலைவர்கள், 22 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்பட 100 சதவீத பதவிகளையும் திமுக மற்றும் கூட்டணி கட்சியினரே கைப்பற்றும் வண்ணம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் வென்றதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி வாகை சூடி தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கட்சியினருக்கோ, கூட்டணிக் கட்சியினருக்கோ துரோகம் செய்ய வேண்டும் என கனவில் கூட நினைக்கக் கூடாது என்றார்.

Related Stories: