ஊத்துக்கோட்டை பகுதிக்கு தடையில்லா மின்சாரம்: மின்வாரிய அதிகாரி தகவல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து ஊத்துக்கோட்டை, தாராட்சி, போந்தவாக்கம்,  சீத்தஞ்சேரி என 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது.  கடந்த சில மாதங்களாக ஊத்துக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் ஊத்துக்கோட்டை பகுதி மக்கள் பலமுறை முறையிட்டனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே, நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தடைபட்ட மின்சாரம் இரவு 9.15 மணிக்கு தான் வந்தது. இதனால், கொசுக்கடியால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின்வாரிய அதிகாரிகளிடம், `எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. அதை சீராக வழங்கவேண்டும்,’ என கோரினர். இதைக்கேட்ட உதவி செயற்பொறியாளர் சேகர், ‘ஊத்துக்கோட்டை பகுதிக்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க குஞ்சலம் கிராமத்தில் 110 மெகாவாட் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட இருக்கிறது. அதை அமைத்த பிறகு மின் பிரச்னை இருக்காது. 3 மாதத்தில் சீராகிவிடும்.

மேலும், அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் புதிய பாலம்  அமைக்கும் பணியால்தான். இதற்காக அங்கு பூமிக்கு அடியில் வரும் மின்சார கேபிளை அங்கு பணியாற்றும் ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலை செய்யும்போது அந்த கேபிள் அறுந்து விடுகிறது. இதனால், மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. மேலும், இந்த மின்தடை பிரச்னை இன்னும் இரண்டு நாட்களில் சீரமைக்கப்படும்,’ என கூறினார். இதனை ஏற்று பின்னர் வியாபாரிகள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: