திருத்தணி நகராட்சி பகுதிகளில் சுரங்கப்பாதை, பாலம், கால்வாய் சீரமைக்கும் பணிகள் துவக்கம்

திருத்தணி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வீடுகளுக்குள் வெள்ள நீர் செல்வதை தடுக்கவும், சுகாதார சீர்கேடு, தொற்றுநோய்கள் பரவும் அபாயத்தை தடுக்கும் வகையிலும் அரசு சார்பில் நேற்று முன்தினம் முதல் வரும் 25ம் தேதி வரை மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்படி நகர்ப்புற பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் கால்வாய்கள், சிறு பாலங்கள் தூர்வாரி தூய்மைப்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், திருத்தணி உட்கோட்ட பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரயில்வே சுரங்கப்பாதை, கால்வாய், சிறு பாலங்கள், பாலம் மற்றும் மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கும் பணிகள் நேற்று துவங்கியது. மேலும், மழைநீர் வடிகால்வாய், தடுப்பு சுவர் ஆகிய இடங்களில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை 15 ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். திருத்தணி நகரில் மழைநீர் தேங்காதவாறு உறுதி செய்யும் வகையில் இப்பணிகள் நடைபெறுகிறது என உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்தார். இதுகுறித்து திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் கூறுகையில், `திருத்தணி பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட மாவட்ட, மாநில நெடுஞ்சாலையில் உள்ள பாலம், சிறுபாலங்கள், மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 25ம் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும்’ என்றார்.

Related Stories:

>