தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலனுக்காக ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு தொடக்கம்

சென்னை: ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன் கருதி, கடந்த 17ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிவாகிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் இணைந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தயாரிப்பாளர்களின் நலனுக்காக 2 சங்கங்களும் இணைந்து செயல்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ’ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு’ தொடங்கப்பட்டது.

தற்போது தயாரிப்பிலுள்ள படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை பயன்படுத்தி படப்பிடிப்புகளை நடத்துவது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வருங்காலத்தை கருத்தில் கொண்டு, நிலுவையிலுள்ள படங்களின் வெளியீட்டுக்கு உதவுவது, விபிஎப் கட்டணத்தை முறைப்படுத்துவது, பெப்சி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு தயாரிப்பாளர்களின் நலனுக்காக ஒப்பந்தங்கள் செய்வது, மாதந்தோறும் 2 முறை சந்தித்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்கான செயல்பாடுகளை 2 சங்கங்களும் இணைந்து செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த தயாரிப்பாளர்கள் கூட்டுக்குழு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் பாரதிராஜா, கே.முரளிதரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயார், கலைப்புலி எஸ்.தாணு, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முரளி ராம.நாராயணன், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன், எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ், எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, ஜி.தனஞ்செயன், எஸ்.ஆர்.பிரபு, எஸ்.லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோர் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: