போதை மருந்து விவகாரத்தில் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பில்லை: கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்

திருமலை: போதை மருந்து விவகாரத்தில் நடிகர், நடிகைகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என கோர்ட்டில் கலால்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் விடுதியில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த விருந்தில் போதை மருந்து சப்ளை செய்ததாக கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்தனர். கெல்வினிடம் நடத்திய விசாரணையில், டோலிவுட்டை சேர்ந்த பல திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அவர் தெரிவித்த தகவல் அடிப்படையில், ரவிதேஜா தருண், நவ்தீப், சார்மி, ரகுல் பிரீத் சிங், முமைத்கான் உள்ளிட்ட 13 தெலுங்கு முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடந்தது. மேலும், போதை மருந்து சப்ளை விவகாரத்தில் பணம் பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை, ரங்காரெட்டி மாவட்ட நீதிமன்றத்தில் கலால் துறை நேற்று தாக்கல் செய்தது. அதில், போதை மருந்துகளை திரையுலகினர், ஓட்டல்கள், மாணவர்கள் மற்றும் மென்பொருள் ஊழியர்களுக்கு விற்றதாக கெல்வின் சாட்சியம் அளித்திருந்தார். ஆனால், கெல்வின் தெரிவித்தப்படி டோலிவுட் திரைப்பட பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதற்கான போதிய ஆதாரம் இல்லை. போதை மருந்து வழக்கில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) கெல்வின் தெரிவித்த தகவலின் அடிப்படையில் பலருக்கு நோட்டீஸ் வழங்கி அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டது.

இதில், கெல்வின் தெரிவித்தப்படி உரிய வலுவான ஆதாரம் இல்லை. திரைப்பட பிரபலங்கள் மற்றும் பிற சந்தேகப்படும் நபர்கள் போதை மருந்துகள் வாங்கவில்லை. மேலும், இயக்குனர் புரிஜெகநாத் மற்றும் நடிகர் தருண் ஆகியோர் தாமாக முன்வந்து போதை மருந்து ஆய்வக சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தனர். இதில், போதை மருந்து பயன்படுத்தியதாக எந்தவித தடயங்களும் அவர்களிடம் இல்லை என்று தெரியவந்தது. வழக்கை திசை திருப்பவே கெல்வின் இவ்வாறு தெரிவித்திருப்பது தெரிந்தது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் பட்டியலில் திரைப்பட நட்சத்திரங்களின் பெயர்கள் சேர்க்கவில்லை என்று கலால் துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. இந்த அறிக்கையால் டோலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களது ரசிகர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories:

>