ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு பெண்கள் சேர்ப்பு

புதுடெல்லி: ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்தாண்டு முதல் பெண்களும் சேர்க்கப்படுவார்கள், இதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும்,’ என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ராணுவ உயர் பதவிகளுக்கான ‘தேசிய பாதுகாப்பு அகாடமி’யில் (என்டிஏ) ஆண்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு வருவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை எதிர்த்து குஷ் கால்ரா என்பவர் தொடர்ந்த பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘என்டிஏ.வில் பெண்களையும் சேர்க்க வேண்டும். அதற்கான தகுதித் தேர்வில் பெண்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,’ என்று கடந்த மாதம் 19ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து, ‘தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால், இந்தாண்டு நடைபெறும் தகுதித் தேர்வில் அவர்களை அனுமதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க அவகாசம் தேவை,’ என்று கடந்த 8ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசு நேற்று புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில், ‘அடுத்தாண்டு முதல் (20220 தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள். இதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு அடுத்தாண்டு மே மாதம் வெளியிடப்படும். மேலும், தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஏற்றப்படி மாற்றங்கள் செய்வதற்காக, பாதுகாப்பு துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: