25 ஆயிரம் சதுரடி; ரூ.149 கோடி செலவு ஐக்கிய அரபு அமீரகத்தில் 2வது பிரமாண்ட கோயில்: அடுத்தாண்டு தீபாவளிக்கு திறப்பு

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கான மக்கள் தொகையில்  இந்தியர்களே முதலிடம் வகிக்கின்றனர். இங்கு இந்துக்களுக்காக அபுதாபி அருகே பிரமாண்ட கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதேபோன்று, துபாய் ஜெபல் அலி பகுதியிலும் 2வதாக புதிய கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதன் பணிகள் 52 சதவீதம் நிறைவு பெற்று விட்டதாகவும், மீதமுள்ள பணிகள் நிறைவு பெற்று 2022ம் ஆண்டு கோயில் திறக்கப்படும் என்றும் இதன் நிர்வாகம் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தக நகராக கருதப்படும் துபாயில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்  ரூ.149 கோடி செலவில் பிரமாண்ட‌ இந்து கோயில் கட்டப்பட்டு வருகிறது. அடுத்தாண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையின் போது இக்கோயில் திறக்கப்பட உள்ளது. இது பற்றி இந்த கோயிலின் அறங்காவலர்களில் ஒருவரான ராஜூ ஷரோப்  கூறுகையில், ‘‘கோயிலுக்கான அடிக்கல் கடந்தாண்டு ஆகஸ்ட் 29 நாட்டப்பட்டது. சீக்கிய குருநானக் தர்பார் அருகே அமைய உள்ள இந்த‌ கோயில் பாரம்பரிய முறையில் மிக அழகிய வகையில் கட்டப்பட்டு வருகிறது,’’ என்றார்.

Related Stories: