புகழ் பெற்ற பாகம்பரி மடாதிபதி தூக்கில் தொங்கி மர்ம மரணம் கொலையா? தற்கொலையா? 3 சீடர்கள் கைதால் பரபரப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவரும், மடாதிபதியுமான மஹந்த் நரேந்திர கிரி தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்துள்ளார். இதுதொடர்பாக, மடாதிபதியின் சீடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கொலையா? தற்கொலையா? என்ற மர்மம் நிலவுவதால், அது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பாகம்பரி மடம் உள்ளது. இதன் மடாபதிபதி மஹந்த் நரேந்திர கிரி. இவர், இந்தியாவில் சாதுக்களின் மிகப்பெரிய அமைப்பான அகில பாரதிய அகாடா பரிஷத் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், பாகம்பரி மடத்தில் நேற்று முன்தினம் மாலை மடாதிபதி மஹந்த் கிரி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, தனது அறையில் மடாதிபதி தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். சடலத்தை மீட்ட போலீசார், அங்கிருந்த 8 பக்க தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர். அந்த கடிதத்தில், தனது சீடர்களில் ஒருவரால் ஏற்பட்ட மன அழுத்ததால், தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருந்தது. ஆனாலும், கடிதத்தின் உண்மைத் தன்மை குறித்து போலீசார் விசாரித்து வருவதால், இது தற்கொலையா என்பது சந்தேகமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர். தற்கொலை கடிதத்தில் மடாதிபதியின் சீடர் ஆனந்த் கிரி உட்பட 3 பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனந்த் கிரியை போலீசார் ஹரித்துவாரில் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். மேலும், 2 சீடர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, தகவலறிந்த உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக மடத்திற்கு வந்து, காலமான மடாதிபதிக்கு அஞ்சலி செலுத்தினார். இந்த விஷயத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மடாதிபதி மஹந்த் கிரி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்துள்ளனர். மஹந்த் கிரியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பாகம்பரி மடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மத சடங்குகளுடன் உடல் சமாதி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. பிரபலமான இந்து மத துறவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* ‘பெண்ணுடன் இருப்பது போல் போட்டோ தயாரித்து மிரட்டல்’

இறந்த மடாதிபதி மஹந்த் நரேந்திர கிரியின் தற்கொலை கடிதத்தில் கூறியிருக்கும் தகவல்களை போலீசார் நேற்று வெளியிட்டனர். அதில், மஹந்த் கிரி, ‘கனத்த இதயத்துடன் நான் தற்கொலை முடிவை எடுத்துள்ளேன். என் தற்கொலைக்கு எனது சீடர்கள் ஆனந்த் கிரி, அத்யா பிரசாத் திவாரி, சந்தீப் திவாரி ஆகியோர்தான் காரணம். எனது போட்டோவை, ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருப்பது போல மார்பிங் செய்து அதை சமூக வலைதளத்தில் வைரலாக்க ஆனந்த் கிரி திட்டமிட்டிருப்பதாக ஹரித்துவாரில் இருந்து எனக்கு தகவல் வந்தது. நான் மரியாதையுடன் வாழ்ந்தவன். அந்த மரியாதை கெட்டு, அவப்பெயர் ஏற்பட்டால் எப்படி இந்த சமூகத்தில் வாழ முடியும்? அதற்கு சாவதே மேல். கடந்த 13ம் தேதியில் இருந்தே தற்கொலை செய்ய முயற்சித்தேன். ஆனால், தைரியம் வரவில்லை,’ என கூறி உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உபி போலீசார் அமைத்து விசாரிக்கின்றனர்.

பல கோடி சொத்துக்களும்… துறவிகளுக்குள் சண்டையும்!

* பாகம்பரி மடம் உபியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்தை ஒட்டி சங்கம் அனுமன் கோயில் உள்ளது. பொதுமக்களை தவிர, பிரயாக்ராஜூக்கு வரும் அரசியல் தலைவர்கள் பலரும் தவறாமல் அனுமன் கோயிலுக்கு சென்று பாகம்பரி மடாதிபதியிடம் ஆசி பெறுவது வழக்கம். இதனால், அரசியல் வட்டாரத்திலும் மடாதிபதி மஹந்த் கிரி அதிக செல்வாக்குடன் திகழ்ந்தார்.

* அனுமன் கோயில் வருமானம் போக, பிரயாக்ராஜ் நகரிலும், நொய்டாவிலும் பல நூறு கோடி மதிப்பிலான மடத்தின் சொத்துக்கள் உள்ளன.

* மடத்திற்கு சொந்தமான பல பெரிய நிலங்களை விற்று பணத்தை தனது உறவினர்களுக்கு மஹந்த் கிரி கொடுத்ததாக அவரது சீடரும் யோகா குருவுமான ஆனந்த் கிரி குற்றம் சாட்டினார்.

* இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு, ஆனந்த கிரி மடத்திலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்டார்.

* வெளியேற்றப்பட்ட ஆனந்த் கிரி, அகாடாவில் நிலவும் சர்ச்சை குறித்தும், மடத்தின் சொத்துக்கள் மோசடி செய்யப்படுவதாகவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கடிதங்களை அனுப்பினார்.

* சிபிஐ விசாரணை கோரி வழக்கு

அகில பாரதிய அகார பரி‌ஷத் துணைத் தலைவரான தேவேந்திர சிங், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மஹந்த் கிரியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவருடைய மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்,’ என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: