மபி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனு

போபால்: மத்தியப் பிரதேசத்தில் நடக்கும் மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், கடந்த ஜூலையில் ஒன்றிய இணையமைச்சராக பதவியேற்றார். தற்போது, அவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எம்பி.யாக இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பாஜ எம்பி.யாக இருந்த தர்வார் சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியாக உள்ள இந்த பதவிக்கு வரும் 4ம் தேதி நடக்கும் இடைத்தேர்தலில் எல்.முருகன் போட்டியிடுகிறார்.

இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள். இந்நிலையில், போபாலில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மத்தியப் பிரதேச சட்டப்பேரவை முதன்மை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான ஏபி.சிங்கிடம் அவர் தனது வேட்பு மனுவை சமர்ப்பித்தார். அப்போது, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மபி பாஜ தலைவர் விஷ்ணு தத் சர்மா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், தனக்கு இந்த வாய்ப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இம்மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 230. இதில், பாஜ.வுக்கு 125 இடங்கள் உள்ளன. 95 உறுப்பினர்களை கொண்ட பிரதான எதிர்கட்சியான காங்கிரஸ், இதுவரையில் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. அது வேட்பாளரை நிறுத்தாது என்று ஏற்கனவே மறைமுகமாக கூறப்பட்டுள்ளது. எனவே, எல்.முருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தல் குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மனுத் தாக்கலுக்கு நாளை (இன்று) கடைசி நாள். மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 27ம் தேதி. தேவைப்பட்டால் அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: