×

தமிழகத்தில் 25ம் தேதி வரை நடைபெறும் ‘மெகா’ மழைநீர் வடிகால் தூய்மை பணியில் 97,550 பணியாளர்கள்: சென்னையில் 2,414 பேர் ஈடுபடுவர்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 25ம் தேதி வரை நடைபெற உள்ள மழைநீர் வடிகால் தூய்மை பணியில், 97,550 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர் என  நகராட்சி நிர்வாக துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகம் முழுவதும் 20ம் தேதி (நேற்று முன்தினம்) முதல் வரும் 25ம் தேதி வரை ‘‘மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மை பணி முகாம்’’ அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு சேலம் மாநகராட்சியில் துவக்கி வைத்தார். அதன்படி, 14 மாநகராட்சிகளிலுள்ள 829 வார்டுகளில் 1362 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 23,838 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இந்த பணியினை மேற்பார்வையிட 1572 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். 7 நகராட்சி நிர்வாக மண்டலங்களில் உள்ள 121 நகராட்சிகளில் 3,497 வார்டுகளில் 4,591 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 42,634 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்த பணியினை மேற்பார்வையிட 3051 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 7951 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 205 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவுள்ளன. இதற்காக 2830 இயந்திரங்களும் 28,624 பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகளில், மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 2,414 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் கால்வாய் மொத்த தூரம் 82.884 கி.மீ ஆகும். மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தி எடுக்கப்படும் வடிகால் படிவங்களை அகற்றும் பணி 227 சாலைகளில் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Chennai ,Tamil Nadu , 97,550 employees to work on 'mega' stormwater drainage in Tamil Nadu till 25th: 2,414 to be involved in Chennai
× RELATED ‘அப் கி பார்…சாக்கோ பார்…’ இணையத்தில் தீயாய் பரவும் பாஜ கோஷம்