மகளிர் ஒருநாள் போட்டி: மிதாலி போராட்டம் வீண்; தொடர்ச்சியாக 25வது வெற்றியுடன் ஆஸ்திரேலியா உலக சாதனை

மெக்கே: இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி, தொடர்ச்சியாக 25வது வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. ரே மிட்செல் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 8 ரன், ஸ்மிரிதி மந்தனா 16 ரன்னில்  அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பிறகு மிதாலியுடன் இணை சேர்ந்த அறிமுக வீராங்கனை  யாஸ்டிகா பாட்டியா 35 ரன் எடுத்தார். இருவரும் 3வது விக்கெட்டுக்கு 77 ரன் சேர்த்தனர். தீப்தி ஷர்மா 9 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் பொறுமையாக விளையாடி தனது 59வது அரை சதத்தை விளாசிய மிதாலி, 63 ரன்னில் (107 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழந்தார். ஜுலன் கோஸ்வாமி 20 ரன் எடுத்தார். இந்தியா 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது.

அறிமுக வீராங்கனைகள் ரிச்சா கோஷ் 32 ரன் (29 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), மேக்னா சிங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் 18 வயது வேகப் பந்துவீச்சாளர் டார்சி பிரவுன் 4, சோபி மோலினெக்ஸ், அறிமுக வீராங்கனை ஹன்னா டார்லிங்டன் தலா 2 விக்கெட் எடுத்தனர். அடுத்து 226 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணிக்கு,  ரேச்சல் ஹெய்ன்ஸ் - அலிஸா ஹீலி ஜோடி 21.2 ஓவரில் 126 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது. அலிஸா 77 ரன் (77 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பூனம் யாதவ் பந்துவீச்சில் வஸ்த்ராகர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் மெக் லானிங் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஆஸி. அணி 41 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமகா வென்றது. ரேச்சல் 93 ரன் (100 பந்து, 7 பவுண்டரி), மெக் லானிங் 53 ரன்னுடன் (69 பந்து, 7 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி நாளை மறுநாள் மெக்கேவில் நடக்கிறது.

* வெள்ளி விழா வெற்றி

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆஸி. மகளிர் அணி தொடர்ச்சியாக 25வது வெற்றியுடன் உலக சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணிக்கு எதிராக 2018 மார்ச்சில் தொடங்கிய இந்த வெற்றிப் பயணம், இந்தியாவுக்கு எதிராகவே உலக சாதனையுடன் முடிந்திருக்கிறது. இந்த 25 ஆட்டங்களில் இந்தியா (0-3), பாகிஸ்தான் (0-3), நியூசிலாந்து (0-3), இங்கிலாந்து (0-3), வெஸ்ட் இண்டீஸ் (0-3), இலங்கை (0-3), நியூசிலாந்து (0-3), நியூசிலாந்து (0-3), இந்தியா (0-1)  ஆகிய அணிகள் ஆஸி.யிடம் தோற்றுள்ளன.

* 8 இன்னிங்சில் 6 அரைசதம்

இந்தப் போட்டியில் அரைசதம் விளாசியதன் மூலம்  மிதாலி தொடர்ச்சியாக 5வது அரை சதம் அடித்துள்ளார். 2021ல் விளையாடிய 8 ஆட்டங்களில் 6வது  அரை சதம் இது. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக முறையே 50, 36, 45, 79 ரன்,  இங்கிலாந்துக்கு எதிராக 3 ஆட்டங்களில் முறையே 72, 59, 75* ரன் குவித்துள்ளார். ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் மிதாலி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக 7 அரை சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையை ஏற்கனவே அவர் நிகழ்த்தியுள்ளார்.

Related Stories: