தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி தேர்தல் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்: போட்டியின்றி தேர்வாகிறார்கள்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 2 மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடும், இரண்டு திமுக வேட்பாளர்களும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர், தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து, இருவரும் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து காலியாக உள்ள மாநிலங்களவை 2 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், அக்டோபர் 4ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 15ம் தேதி தொடங்கியது. 22ம் தேதி (இன்று) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 23ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். வேட்புமனு வாபஸ்பெற 27ம் தேதி (திங்கள்) மாலை 3 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என கட்சி தலைமை கடந்த வாரம் அறிவித்தது. அதன்படி, திமுக வேட்பாளர் 2 பேரும் நேற்று மதியம் 12 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது திமுக எம்பிக்கள் கனிமொழி, என்.ஆர்.இளங்கோ, திருச்சி சிவா, பி.வில்சன் மற்றும் அமைச்சர் கே.என்.நேரு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர். இவர்களின் வேட்புமனுக்களை தலா 10 திமுக எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்தனர். தற்போது திமுக எம்எல்ஏக்கள் அதிக பலத்துடன் இருப்பதால் திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள 2 வேட்பாளர்களும் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. சுயேட்சை வேட்பாளராக, சேலம் ஆத்தூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் உட்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியவில்லை. இதனால் வேட்புமனு பரிசீலனையின்போது அவர்களது மனு நிராகரிக்கப்படும். அதனால், திமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களே போட்டியின்றி வெற்றிபெறுவார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற 27ம் தேதி (திங்கள்) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும்.

Related Stories:

>