×

ஊரக பகுதிகளில் நிலமற்ற, இல்லம் இல்லாத ஏழைகளுக்கு வீடுகள் வழங்க வருவாய் துறை செயலாளர் தலைமையில் சிறப்பு பணிப்பிரிவு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு: குடிசைகளே இல்லாத தமிழகம் உருவாக வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கமாகும். 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை அடையும் பொருட்டு, ஊரக பகுதிகளில் வாழும் வீடு இல்லாத, குடிசை வீடுகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு தேவையான நிலையான வீடு கட்டி கொடுப்பதே பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தின் குறிக்கோள் ஆகும்.  இந்த திட்டத்தின் பயனாளிகள் 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பபின்  நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  

இத்திட்டம் நிலமற்றோருக்கு முன்னுரிமை அளித்தபோதிலும், நிலமற்ற பயனாளிகள் இந்த திட்டத்தின் மூலம் வீடுகள் பெற இயலாத நிலை உள்ளது. மேலும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தினை விரைவுப்படுத்தி, வீடுகள் கட்டும் பணியினை துரிதப்படுத்த இயலவில்லை. எனவே, நிலமற்ற பயனாளிகளுக்கு, நிலம் வழங்கி, வீடுகள் கட்டும் பணியினை துரிதப்படுத்திட, அரசு செயலாளர் (வருவாய்) மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தினை செயல்படுத்தும் அரசு செயலாளரை கொண்ட சிறப்பு பணிப்பிரிவு அமைக்க ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில், இத்திட்டத்தின் செயலாக்கத்தினை விரைவுபடுத்தவும், 2011-ன் சமூக பொருளாதார கணக்கெடுப்பின் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நிலமற்ற பயனாளிகளுக்கு, விரைவில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பொருட்டு, இந்த அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு முதன்மை செயலாளரை தலைவராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் அரசு முதன்மை செயலாளரை துணை தலைவராகவும், நில நிர்வாக ஆணையரை உறுப்பினராகவும் மற்றும்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் இயக்குநரை உறுப்பினர்/செயலராகவும் கொண்ட சிறப்பு பணிப்பிரிவு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதன்மூலம் இந்த திட்டத்தினை விரைவுப்படுத்தி, நிலமற்ற பயனாளிகளுக்கு நிலம் வழங்கி, குடிசைகளே இல்லாத தமிழகம் என்ற குறிக்கோளை எய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Tags : Special Task Force ,Department of Revenue , Special Task Force headed by Revenue Secretary to provide houses to landless and homeless poor in rural areas: Government of Tamil Nadu Order
× RELATED வருவாய் மற்றும் பேரிடர்...