மும்பை டூ சென்னைக்கு விமானத்தில் பயணம் செல்ல நாய்க்காக ரூ.2.5 லட்சம் செலவு செய்த பெண்: சமூக வலைதளத்தில் வைரல் வீடியோ

சென்னை: மும்பையிலிருந்து சென்னைக்கு ரூ.2.5 லட்சம் கட்டணம் செலுத்தி, தன்னுடைய செல்ல நாய்குட்டியை ஒரு பெண்  அழைத்து வந்தார்.  மும்பையிலிருந்து சென்னைக்கு கடந்த மாதம் 15ம் தேதி காலை 9 மணிக்கு ஏர் இந்தியா விமானம்  புறப்பட்டது. அதில் ஒரு பெண் ‘‘மால் டீஸ்’’ என்ற ஒரு உயர்ரக நாயுடன் பயணம் செய்ய வந்தார். விமானங்களில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுடன் பயணம் செய்யலாம். ஆனால் அந்த பிராணிக்கும் விமான டிக்கெட் எடுக்க வேண்டும். அதோடு, அந்த பிராணிக்கு நோய் தொற்று எதுவும் இல்லை என்ற சான்றிதழ், நோய் எதிர்ப்பு தடுப்பூசிகள் போட்ட சான்றிதழ்களும் வைத்திருக்கவேண்டும். அந்த பிராணி குறிப்பிட்ட எடைக்கு குறைவாக இருந்தால், பயணி தன்னுடன் சீட்டில் வைத்துக் கொள்ளலாம்.

இல்லையேல் விமானத்திற்குள் உள்ள கூண்டு அறைக்குள் வைக்க வேண்டும். அதற்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.  அது, விமானியின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஆனால், இந்த பெண் கொண்டு வந்திருந்த உயர்ரக நாய், குறிப்பிட்ட எடைக்கு மேல் உள்ளது என்பதால், அதை கூண்டில் வைக்கும்படி விமான ஊழியர்கள் கூறினர். ஆனால், அந்த பெண் அதற்கு மறுத்துவிட்டார். தன்னுடன் சீட்டில் தான் வைத்திருப்பேன் என்று கூறினார்.

 அதோடு அந்த விமானத்தில், அந்த பெண் பயணம் செய்ய இருந்த பிசினஸ் கிளாஸ் பகுதியில் 12 சீட்டுகள் இருந்தன. அதில் அந்த பெண்ணுக்கு ஒரு டிக்கெட்,  நாய்க்கு ஒரு டிக்கெட் வாங்கினார். மேலும், பிசினஸ் கிளாசில் இருந்த மீதி 10 சீட்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.2.5 லட்சத்தையும் தானே செலுத்துவதாக கூறினார். அதற்கு ஏர்இந்தியா அதிகாரிகள் சம்மதித்தனர். அதன்பிறகு, அந்த பெண் ரூ.2.5 லட்சம் செலுத்தி, விமானத்தில் தனது பக்கத்து சீட்டில் நாயை வைத்துக்கொண்டு பயணம் செய்தார். அந்த விமானம் சென்னைக்கு நேற்று காலை 11.10 மணிக்கு வந்தது. அந்த பெண்ணும் நாயுடன் விமானத்திலிருந்து இறங்கி, விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். இந்தச் சம்பவம்  தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.

Related Stories:

>