மகளிர் சுய உதவி குழு, உற்பத்தியாளர், தொழில் குழுக்களுக்கு ரூ.699.26 கோடியில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மகளிர் சுய உதவி குழுக்கள், உற்பத்தியாளர், தொழில் குழுக்கள் மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளுக்கு ரூ.699.26 கோடி மதிப்பில் 6,00,926 பயனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

ஊரக பகுதிகளில் உள்ள 8,210  மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தலா ரூ.15,000 வீதம்  ரூ.12.32 கோடி மதிப்பீட்டில் சுழல் நிதி, ஊரக பகுதியில் உள்ள 8,776 ஏழை எளிய நலிவுற்றவர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.10.97 கோடி நலிவு நிலை குறைப்பு நிதி, சுய உதவிக்குழு ஒன்றுக்கு தலா ரூ.50,000 வீதம் 13,255 குழுக்களுக்கு ரூ.66.28 கோடி சமுதாய முதலீட்டு நிதி, ஊட்டச்சத்து தோட்டம் அமைக்க 1,27,903 சுய உதவி குழு மகளிர்க்கு ரூ.64 லட்சம் நிதியுதவி, கிராமப்புற மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கூடுதல் வருமானம் பெற நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்திட தலா 100 நாட்டு கோழி குஞ்சுகளை வழங்கும் திட்டத்தின் கீழ் 3,936 சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ.3.53 கோடி நிதியுதவி, சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் 985  பேருக்கு ரூ.4.98 கோடி, 528 தொழில் குழுக்களுக்கு ரூ.23.36 கோடி, 76 ஒத்த விருப்ப குழுக்களுக்கு ரூ.70 லட்சம், 1,470 சுய உதவி குழுக்களுக்கு ரூ.60.85 கோடி மற்றும் 43 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.65 லட்சம் தொழில் துவங்க வங்கி கடன் என மொத்தம் ரூ.698.86 கோடி நிதியுதவிகளை முதல்வர் நேற்று பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாவட்டத்திற்கு ஒன்று என்ற அடிப்படையில் 23 மாவட்டங்களில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் 23 சமுதாய பண்ணை பள்ளிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார். சுய உதவி  குழுவுக்கு ரூ.3.53 கோடி : முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவித்திட 3,936 நிலமற்ற மற்றும் ஏழை மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு தலா 100 நாட்டு கோழி குஞ்சுகளை வளர்க்க ரூ.3.53 கோடி நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக ஒரு மகளிர் சுய உதவி குழு உறுப்பினருக்கு நிதியுதவி வழங்கினார். அதன்படி, இந்த ஆண்டு 1663 கிராம ஊராட்சிகளில், ஊராட்சி ஒன்றிற்கு 3 அல்லது 4 புழக்கடை கோழி வளர்ப்பு அலகுகள் வீதம், 5528 அலகுகள், அலகு ஒன்றிற்கு ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.4.97 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன், தலைமை செயலாளர் இறையன்பு, துறை செயலாளர் கோபால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: