×

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

சென்னை: உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் வசதிக்காக, பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  சென்னை மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் மரக்கன்று நடும் விழாவில் நேற்று பங்கேற்ற பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: நீட் தேர்வில் என்ன நடக்கிறது என்பது தெரியும். கேள்வித்தாள் வெளியானது, விலை கொடுத்து கேள்வித்தாள் வாங்கிய விவகாரங்கள் எல்லாம் வெளியில் வந்துள்ளது. அறிவு சார்ந்த படிப்பை படிக்கும் போது எந்த தடையும் இருக்கக் கூடாது என்பதுதான் நமது  முதல்வரின் விருப்பமாக உள்ளது. இதற்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜகவினர்கூட நீட் தேர்வு விஷயத்தில்,  சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் இந்த தீர்மானம் குறித்து துறை சார்ந்த அமைச்சர் தொடர்ந்து  கண்காணித்து வருகிறார். தமிழ் வழியில் படித்து விட்டு, எம்பிபிஎஸ் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். உயர்கல்வியில் பெரும்பாலும் ஆங்கில வழியில் தான் பாடத்திட்டங்கள் இருக்கிறது. எனவே தமிழ் வழியில் கற்று செல்லும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கூறினார்.


Tags : Minister ,Mahesh Poyamozhi , Spoken English in Government Schools: Interview with Minister Mahesh Poyamozhi
× RELATED அமைதிப்பூங்காவான தமிழகம் என மீண்டும்...