×

அடையாறில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் ‘வாக்கிங்’: ‘என்றும் மார்க்கண்டேயன்’ என புகழ்ந்த நடைபயிற்சியாளர்கள்

சென்னை: அடையாறில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, அவரிடம் மக்கள் பலர் இயல்பாக உரையாடினர். பல சுவாரசியமான கேள்விகளை நடைபயிற்சியாளர்கள் கேட்க, அதற்கு முதல்வரும் இயல்பாக பதில் சொன்னார். ‘இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க’ என்று அவர்கள் புகழ்ந்தது கலகலப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுவாக பிட்னஸில் அதிக கவனம் செலுத்த கூடியவர். தனது உடலை நன்றாக வைத்துக்கொள்ள அடிக்கடி சைக்கிளிங் செல்வார். அது தொடர்பான வீடியோக்களும் அடிக்கடி வெளியாகி இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சிக்கான ஊக்கத்தை தந்தது. இந்தியாவிலேயே அடிக்கடி சைக்கிளிங் செய்யும் ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் அடிக்கடி முதல்வர் ஸ்டாலின் ஜிம்மிற்கு செல்வதும், நேரம் கிடைக்கும்போது வாக்கிங் செல்வதும் வழக்கம். இந்நிலையில் நேற்று சென்னை அடையாறில் உள்ள தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார். பனியன், டிராக் சூட் அணிந்திருந்த அவர் பெரிய அளவில் பாதுகாப்பு எதுவும் இல்லாமல், இயல்பாக மக்களோடு மக்களாக காலையில் வாக்கிங் சென்றார். அங்கு நடைபயிற்சி மேற்கொண்டவர்கள், முதல்வரை அடையாளம் கண்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். சிலர் அவரிடம் பேச்சு கொடுத்தனர். தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பலர், ‘உங்கள் ஆட்சி நன்றாக உள்ளது’ என்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இன்னும் சிலர், தங்களின் கோரிக்கைகளையும் வைத்தனர். அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரம் கொடுத்து, நடந்தபடியே பதில் அளித்தார். அங்கு நடை பயிற்சி மேற்கொள்ள வந்தவர்களுடன் இயல்பாக உரையாடினார்.

தொடர்ந்து அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, அங்கு நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்தார். முதல்வரும் நடைபயிற்சியை நிறுத்தி பேசத்தொடங்கினார். அப்போது அந்த பெண், ‘‘சார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தில் உங்களை சந்தித்தேன். உங்களோடு அப்போது செல்பி எடுக்க முடியவில்லை. நீங்கள் கட்டாயம் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும் என்று அன்று நான் தெரிவித்தேன். நீங்கள் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்’’ என்று கூறினேன். இப்போது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சி. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றீங்க. உங்கள் ஆட்சி சிறப்பாக உள்ளது. திட்டங்களை சிறப்பாக கொண்டு வருகிறீர்கள். உங்கள் ஆட்சி இனியும் அப்படியே தொடர வேண்டும், நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்’’ என்று கூறினார்.

அதன்பின், அவர் கேட்ட கேள்வி ஒன்று அங்கிருந்தவர்களை திரும்பி பார்க்க வைத்தது. ‘கடைசியா ஒன்று கேட்கிறேன் சார், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க. எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள்’’ என்று கேட்டார். அதற்கு முதல்வர், ‘‘நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்’’ என்று கூறினார். இதை கேட்டதும் அந்த பகுதி கலகலப்பானது. இதற்கு அந்த பெண், ‘‘ஆமாம் சார்.. நானும் அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்த்து இருக்கிறேன் சார்’’ என்று அந்த பெண் கூறினார். அதன்பின் கால்பந்து விளையாட்டிற்காக ஸ்பெயின் சென்றுள்ள உங்கள் பேரன் நன்றாக ஆடுவார் என்று நம்புகிறோம். அவர் வெற்றியுடன் திரும்ப வேண்டும். அவர் பயிற்சி எடுக்கும்போது நாங்கள் அவரை பார்த்திருக்கிறோம், என்று அந்த பெண் முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Adyar , Chief Minister MK Stalin 'walks' with the public in Adyar: Pedestrians hailed as 'Markandeyan'
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...