அடுத்த வாரம் பாரத் பயோடெக் அறிக்கை தாக்கல்.! குழந்தைகளுக்கான தடுப்பூசி 3ம் கட்ட சோதனை நிறைவு: அடுத்ததாக மூக்கு வழி மருந்து சோதனை

புதுடெல்லி: பாரத் பயோடெக் நிறுவனம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், குழந்தைகளுக்கான தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது. இதற்கான அறிக்கையை ஒன்றிய அரசிடம் அடுத்த வாரம் தாக்கல் செய்கிறது. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 80 கோடி டோசுக்கு மேல் தடுப்பூசி போடப்பட்ட நிலையில், அடுத்ததாக குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்த ஐதாராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், குழந்தைகளுக்கான தனது தடுப்பூசியை 3 கட்டங்களாக பரிசோதித்து வருகிறது. இதில், இறுதிக்கட்ட  சோதனை தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவன நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா நேற்று கூறுகையில், ‘‘குழந்தைகளுக்கான தடுப்பூசி இறுதிக்கட்ட சோதனை நிறைவடைந்துள்ளது. இதன் இறுதி அறிக்கை இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும். இந்த தடுப்பூசி 1000 சிறுவர், குழந்தைகளிடம் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, மூக்கு வழி தடுப்பு மருந்தின் 2ம்கட்ட சோதனையை தொடங்க உள்ளோம். இது 3 பிரிவாக பிரிக்கப்பட உள்ளது. முதலில் கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு பிறகு மூக்கு வழி தடுப்பு மருந்து தரப்படும். 2வது பிரிவுக்கு 2 டோஸ் வழங்கப்படும். 3வது பிரிவுக்கு முதலில் மூக்கு வழி தடுப்பு மருந்து கொடுத்து, 28 நாட்களுக்குப் பிறகு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என்றார்.

Related Stories: