9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் சீட் கேட்டு நெருக்கடி பாஜவின் மிரட்டலுக்கு பணிந்தது அதிமுக: வெற்றி பெறும் தொகுதிகளை தாரைவார்த்தது

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், பாஜவின் தொடர் அழுத்தத்தால் அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளை அக்கட்சியின் தலைமை வாரி வழங்கியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்.  அதிமுக கூட்டணியில் இருந்த பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. தொடர்ந்து அதிமுக கூட்டணியில் எவ்வளவு இடங்களை பெறுவது என்பது தொடர்பாக தேர்தல் நடைபெற உள்ள அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன், பாஜ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான பேச்சுவார்த்தை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. இரண்டு கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

இந்நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், மாபா.பாண்டியராஜன் மற்றும் பாஜ சார்பில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், செம்பாக்கம் வேதசுப்பிரமணியம், பலராமன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களை கேட்டு அதிமுக நிர்வாகிகளிடம் பாஜ தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை இரவு 7 மணிக்கு மேல் தொடர்ந்தது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.

இது பாஜ தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் பாஜ கேட்ட இடங்களை அதிமுக ஒதுக்கியதாக தெரிகிறது. இதேபோல மற்ற மாவட்டங்களிலும் பாஜ கேட்ட இடங்களை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பாஜ தரப்பில் கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என்றும், அதனால் தான் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக இறங்கி வந்து கேட்ட இடங்களை பாஜவுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த இடங்களில் எல்லாம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களாக அக்கட்சியினர் கருதியிருந்தனர். இந்நிலையில் கேட்ட இடங்கள் கிடைத்த சந்தோஷத்தில் பாஜவினர் அடுத்த நிமிடமே போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்தனர்.

Related Stories:

>