கார் உள்பட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதித்த தடையை நீக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நான்கு சக்கர வாகனங்களில், பம்பர் பொருத்தப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்  மறுத்துவிட்டது. கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், 5 ஆயிரம்  ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்  என்று போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், பம்பர்களால் வாகன விபத்து ஏற்படுகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை.

வாகனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.கடந்த 1980 முதல் வாகனங்களில்  பம்பர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பம்பர் என்பது வாகனங்களுக்கான கூடுதல்  வசதி மட்டுமே என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களின் பாதுகாப்புக்கு மிக அவசியம். பம்பர் பொருத்திய வாகன  ஓட்டுனர்கள் அதிவேகத்தில் வாகனங்களை ஓட்டுவார்கள். பொதுமக்களின் நலன் கருதியே ஒன்றிய அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இது ஒன்றிய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஒன்றிய அரசின்  உத்தரவை மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. மாநில அரசுகள் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: