9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது: ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல்.! மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது. இந்நிலையில், ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி வருகிற அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தலும், மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவர், கிராம ஊராட்சித் துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடத்தப்படுகிறது. மொத்தம் 27,003 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 15ம் தேதி தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. திமுகவில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தொகுதிகள் சுமூகமாக பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேறி தனித்து போட்டி என்று அறிவித்தது. தொடர்ந்து கூட்டணியில் உள்ள பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. இழுபறிக்கு பிறகு, தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் உடனடியாக வேட்புமனுவும் தாக்கல் செய்தனர். இதேபோல மற்ற கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நேற்று காலை முதல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி போட்டு கொண்டு வேட்புமனு தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 48 ஆயிரத்து 635 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 11,393 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3,912 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 359 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மொத்தம் நேற்று வரை 64 ஆயிரத்து 299 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 23ம் தேதி(நாளை) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. 25ம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம். தொடர்ந்து மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடக்கிறது. 12ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணி நடைபெறும். தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.  இதன் ஒரு பகுதியாக ஆவணங்கள் இல்லாமல் ரூ.50,000 மேல் பணம் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்பிற்கும் ஒரு பறக்கும்படை என்ற வீதத்தில் பறக்கும் படைக்கு ஓர் செயற் குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு அல்லது மூன்று காவல்துறை காவலர் கொண்ட பறக்கும் படை அமைத்தல் வேண்டும். இப்பறக்கும் படைகள் மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற, மாதிரி நடத்தை விதி கண்டிப்பாக அமலில் உள்ளதை பறக்கும் படைகள் உறுதி செய்ய வேண்டும். மாதிரி நடத்தை விதிமீறல்கள் மற்றும் அச்சுறுத்தல், மிரட்டுதல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் அதிக அளவில் பணம் லஞ்சமாக வழங்குதல் தொடர்பான புகார்களின் மீது முழு கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும். வேட்பாளரோ அல்லது அவரது முகவரோ அல்லது கட்சி தொண்டரோ, தகுதியான ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை வாகனத்தில் எடுத்து சென்றாலோ, ரூ.10,000 மதிப்புள்ள விளம்பர தட்டிகள் அல்லது தேர்தல் பொருட்கள் அல்லது போதை பொருட்கள் அல்லது மது, ஆயுதங்கள் அல்லது அன்பளிப்பு பொருளை எடுத்துச் சென்றாலோ பறக்கும் படைகள் ஆய்வின் போது பறிமுதல் செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>