உரியில் இணைய சேவைகள் துண்டிப்பு; எல்லையில் 70 தீவிரவாதிகள் ஊடுருவல்?.. 30 மணி நேர தேடுதல் வேட்டையால் பதற்றம்

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாரமுல்லா அடுத்த உரியில் 70 தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்மு - காஷ்மீரின் வடக்கு காஷ்மீர் மாவட்டமான பாரமுல்லாவில் அமைந்துள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய வனப்பகுதியான உரி செக்டாரில், பாகிஸ்தான் ஆதரவு 70 தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் உரியின் வனப் பகுதிகளில் தொடர்ந்து 30 மணி நேரம் மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது பாதுகாப்பு படையினரை தீவிரவாதிகள் சுட்டதில், பாதுகாப்பு படை வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் டி.பி.பாண்டே கூறுகையில், ‘உரிப் பகுதியில் மிகப் பெரிய ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். ஊடுருவல் முயற்சிக்குப் பிறகு, அவர்கள் இன்னும் உரியின் வனப்பகுதிக்குள் இருக்கிறார்களா அல்லது திரும்பிச் சென்றார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

இருப்பினும், ஊடுருவல் முயற்சியை முறியடிக்க பாதுகாப்பு படையினர் மிகுந்த உஷார் நிலையில் உள்ளனர்’ என்றார். இதற்கிடையே, எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள எல்லை நகரமான உரியில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>