பழங்குடியின பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் குவா...குவா...

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையை அடுத்துள்ள லிங்காபுரத்தை தாண்டி காந்தவயல்,மேலூர், ஆலூர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்கள் உள்ளன. தற்போது தொடர் மழையின் காரணமாக பவானியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் லிங்காபுரத்திலிருந்து பழங்குடியின கிராமங்களுக்கு செல்ல பரிசல் மற்றும் படகு போக்குவரத்தினை பொதுமக்கள் நம்பி உள்ளனர். இந்நிலையில் மேலூர் மலைக்கிராமத்தை பகுதியை சேர்ந்தவர் மாரி(28), இவரது மனைவி தீபா(27).

நிறைமாத கர்ப்பிணியான தீபாவிற்கு நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்து 3 ஆம்புலன்ஸ் வாகனங்களில் வந்த 108 ஊழியர்கள் கர்ப்பிணிக்கு முதலுதவி சிகிச்சையளித்தனர். தீபாவிற்கு பிரசவ வலி அதிகரிக்கவே அவசரத்தை உணர்ந்த 108 ஊழியர்கள் ஆம்புலன்சிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அங்கு அப்பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து அப்பெண்ணை பரிசல் மூலமாக பவானியாற்றை கடந்து பின்னர் ஆம்புலன்ஸ் மூலமாக சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது தாயும்,குழந்தையும் நலமாக உள்ளனர். அவசரம் கருதி ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த 108 ஊழியர்களை மலைகிராம மக்கள் பாராட்டினர்.

Related Stories: