பில்லி, சூனிய பரிகாரம் செய்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த சாமியார் கைது: தாய், உறவினர் மீதும் வழக்கு

தானே: மகாராஷ்டிராவில் பில்லி, சூனிய பரிகாரம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தில் சிறுமியின் தாய் மற்றும் உறவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அதையடுத்து, சிறுமியை அவரது தாயும், மற்றொரு நபரும் பிவாண்டி அடுத்த பத்காவில் வசிக்கும் சாந்தாராம் ஜீவ்த்யா ஷெல்கே (61) என்ற சாமியாரிடம் அழைத்து சென்றனர்.

அவர், சிறுமியின் தாயிடம் குடும்ப விவகாரங்களை கேட்டறிந்துவிட்டு, ‘உங்கள் மகளின் இறந்துபோன மாமன், அவரது உடலில் புகுந்துள்ளார். அதனால், உங்கள் மகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும்’ என்று கூறினார். இதனை நம்பிய சிறுமியின் தாய், சில நாட்கள் கழித்து தனது மகளுக்கு பரிகாரம் செய்ய முடிவு செய்து, அந்த சாமியாரிடம் அழைத்து சென்றார்.

இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சாமியார், 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக கூறி காட்டுப் பகுதிக்குள் அழைத்து சென்றார்.

அங்கு, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அந்த சாமியாரின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார். இருந்தும் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை சாமியார் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், அந்த சிறுமியை காட்டிற்குள் இருந்து அழைத்துவந்து, மந்திர, தந்திர வேலைகளை செய்து மீண்டும் தாயிடம் ஒப்படைத்தார். சோர்வுடன் காணப்பட்ட சிறுமி, சில நாட்கள் கழித்து நடந்த சம்பவத்தை, தன் தாயிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர், நார்போலி போலீசில் புகார் அளித்தார்.

அதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட சாமியார் சாந்தாராம் ஜீவ்த்யா ஷெல்கே மீது இந்திய தண்டனைச் சட்டம், போக்சோ சட்டம் பிரிவுகள் 4,8 மற்றும் 12, மற்றும் பில்லி சூனியம் சட்டம், 2013 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து, போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து சித்ரவதைக்கு தள்ளிய அவரது தாய் மற்றும் அவருடன் சென்ற மற்றொரு உறவினர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: