40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் 40 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிஎம்எஸ் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் சங்க தலைவர் நிர்மலா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர்களை தாய்சேய் நல பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும். 12 மணி முதல் 14 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுகிறோம். 8 மணி நேரம் மட்டுமே எங்களை பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுத்தும் போது வாகனம் மற்றும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அரசு விடுமுறை நாட்களிலும், பண்டிகை விடுமுறை நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும். கொரோனா தடுப்பூசி பணிக்கு ஓய்வு பெற்ற மற்றும் பயிற்சி முடித்த செவிலியர்களை ஈடுபடுத்த வேண்டும். கிராம துணை சுகாதார நிலையங்களில் ஸ்டாஃப் நர்ஸ் செவிலியர்களை நியமிக்கும் முடிவினை கைவிட வேண்டும், கிராம துணை சுகாதார நிலையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளதால் சங்க பிரதிநிதிகள் தலைமை செயலகத்திற்கு சென்றுள்ளனர். பேச்சுவார்த்தை முடியும் வரை டிஎம்எஸ் வளாகத்திலேயே காத்திருக்கும் போராட்டம் தொடரும். ஊதிய உயர்வு போன்ற பொருளாதார ரீதியான கோரிக்கைகள் எதுவும் இல்லை. நியாயமான, அத்தியாவசியமான கோரிக்கை என்பதால் அரசு விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>