தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் : ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் அடுத்த ஆண்டு முதல் பெண்களும் சேர்க்கப்படுவார்கள் என்று ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.தேசிய பாதுகாப்பு அகாடமி அமைப்பான என்டிஏவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் பெண்கள் கலந்து கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இந்த தேர்வு ஆண்களுக்கு மட்டுமே என்றும் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதனால் என்டிஏ-வில் ஆண்கள் மட் டுமே சேர்ந்து படிக்க முடியும். இது பாது காப்பு அமைச்சகத்தின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு தெரிவித்திருந்து.

பொது நல வழக்கு

இதனிடையே, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவுக்கு எதிராக குஷ் கால்ரா என்பவர் பொது நல வழக்கை (பிஐஎல்) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து இருந்தார். என்டிஏ தேர்வில் பெண்களும் கலந்துகொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்கண்ட  வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு,தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வை பெண்களும் எழுதலாம் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு விரிவான விவரங்கள் அடங்கிய பிரமாணப் பத்திரம் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களையும் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த ஆண்டு நடைபெறும் தேர்வில் பெண்களை அனுமதிப்பது என்பது சற்று சிரமமான காரியம். மேலும் இது தொடர்பான புதிய விதிமுறைகளை உருவாக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முப்படைகளை சேர்ந்த தளபதிகளிடம் விரிவான ஆலோசனை நடத்திய பின்னர் தான் தற்போது இந்த புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு துறையில் பாலின சமநிலையை கொண்டு வருவது முக்கியமானது தான் என்றாலும், அதனை ஒரே நாளில் மேற்கொள்ள முடியாது என்பதால் அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில்,அடுத்த ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களும் சேர்க்கப்படுவார்கள். சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பாணை வரும் ஆண்டு மே மாதம் வெளியிடப்படும். மேலும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பெண்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வகையிலும் கட்டமைப்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது  என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>